மாகாண நீதிமன்றங்களில் பிணை கோரும் வாய்ப்பு வழங்க வேண்டும்!

அபாயகரமான போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கான பிணை விண்ணப்பம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஊடாக மாத்திரமே செய்வதாக இருக்கக் கூடாது. மாகாண மேல் நீதிமன்றத்தின் ஊடாகவும் விண்ணப்பம் செய்யும் வழிமுறை காணப்பட வேண்டும் இல்லையென்றால் அது நீதியை மறுப்பதாகவும் ,அதிகார பரவலாக்கத்திற்கு எதிரானதாகவும் அமையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
    
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நீதித்துறை தொடர்பான திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அபாயகரமான போதைப்பொருள் பயன்பாடு தொடர்பில் பார்க்கும் போது,இவர்களுக்கு வழங்கப்படும் பிணை விண்ணப்பம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினாலேயே வழங்கப்படுகின்றது. நீதியை அணுகி அதனை பெற்றுக்கொள்வதற்கான முறையே இது மேன்முறையீட்டு நீதிமன்றங்கள் கொழும்பிலேயே உள்ளன.

மேல்நீதிமன்றம் மாகாணங்களில் உள்ளன. ஆனால் இது முழுநாட்டிலும் மத்திய இடத்தில் செய்வதாக இருக்கக் கூடாது. இது நீதியை மறுப்பதாக அமையும். அதிகார பரவலாக்கத்திற்கு எதிரானதாகவும் அமையும். அத்துடன் சிறைச்சாலைகள் தொடர்பான கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு துன்பங்கள் இருக்கக் கூடாது. தண்டனை என்பது தீங்கானதாக இருந்தாலும் அதில் வகைப்பாடுகள் உள்ளன.

அரசாங்க தரப்பில் உள்ளவர்கள் சிறைச்சாலைகளில் ஆடம்பர சொகுசுமாடிகளை அமைக்க எதிர்பார்க்கின்றனர். அப்போது தான் அவர்கள் அங்கு சென்றால் சொகுசாக இருக்கலாம் என்று நினைக்கின்றனர். ஆனால் சிறைச்சாலையில் அனைவரும் சமமாக இருக்க வேண்டும். சிறைக் கைதிகளுக்கிடையே வகுப்புவாதத்தை உருவாக்கிவிடக் கூடாது என்றார்.