ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்: – 4 பேர் சடலங்களாக மீட்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் ரெட்டியூரில் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக இறங்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 4 பேர் உடல்களை மீட்கப்பட்டுள்ளனர். ஹரிஹரன் உடலை தீவிரமாக தேடி வருகிறார்கள். அதையடுத்து அப்பகுதிக்கு சேலம் கலெக்டர் ரோஹிணி விரைந்துள்ளார்.

தென் மேற்கு பருவமழைக் காரணமாக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளிலும், கர்நாடகாவிலும் கன மழை பொழிந்து வருகிறது. அதையடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியைத் தாண்டி வந்ததால் மேட்டூர் அணை மளமளவென நிரம்பும் நிலையில் இருக்கிறது. இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காகத் தண்ணீரை கடந்த 19ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து விட்டார். இதனால், காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. தற்போது, சுமார் 25,000 கன அடிக்கு மேல் தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், காவிரி கரையோரப் பகுதியான மேட்டூர் ரெட்டியூரில் உள்ள கோபால் வீட்டுக்கு, அவரது உறவினர் சரவணன், மைதிலி தம்பதியினர் விஜயமங்களத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். சரவணன், மைதிலி ஆகியோர் தனது குடும்பத்தினரோடு குளிப்பதற்காக காவிரி ஆற்றில் இறங்கியுள்ளனர். தண்ணீர் வேகமாக சென்றுக் கொண்டிருப்பதால் சரவணன், மைதிலி, வாணிஶ்ரீ, ஹரிஹரன்,ரவினா ஆகியோர் 5 பேரையும் தண்ணீர் அடித்து சென்றது. அதையத்து, காவல்துறையினர் மீனவர்கள் மூலம் தீவிரமாக தேடுதல் இறங்கினார்கள். மேலும், தீயணைப்புத் துறையினரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது, சரவணன், மைதிலி, வாணிஶ்ரீ, ரவினா ஆகிய 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஹரிஹரனைத் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சமபவத்தை அடுத்து, சேலம் மாவட்ட கலெக்டர் ரோஹிணி, காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்லுவதால் யாரும் குளிப்பதற்கு கீழே இறங்க கூடாது என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!