மாணவர்களை தவறாக வழிநடத்ததும் அரசியல் குழுக்கள்-பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித்

வெளியில் உள்ள அரசியல் குழுக்கள் பல்கலைக்கழக மாணவர்களின் மனத்தை குழப்பி அவர்களை தவறாக வழிநடத்தி வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதி உப வேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தவறாக வழிநடத்தப்படும் மாணவர்கள் பல சந்தர்ப்பங்களில் தவறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்களில் பெரும்பாலான மாணவர்களுக்கு தமது கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் தேவை இருக்கின்றது.

மிக சிறிய குழுவினர் அரசியல் குழுக்களின் கைப்பாவைகளாக மாறி ஒழுக்க விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உள்ள பிள்ளைகளின் கல்வியை அழிக்காது, அவர்களை நல்வழிப்படுத்துவது அனைவருக்கும் இருக்கும் பொறுப்பு.

மாணவர்களை வழிநடத்த முயற்சிக்கும் அரசியல் குழுக்கள் இதனை புரிந்துக்கொள்ள வேண்டும். இலவச கல்வி கொள்கை நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அதற்காகவும் யாருடைய பணத்தையோ செலவிட வேண்டியுள்ளது.

மக்களின் பணத்தில் நிர்வகிக்கப்படும் பல்கலைக்கழகங்களில் கூடுதலான பயனை பெற மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவது முக்கியமானது எனவும் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் மேலும் தெரிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!