வெளிநாடுளுக்கான இலங்கை மாணவர்களுக்கு கல்வி வீசா – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அவுஸ்திரேலியா மற்றும் கனடாவில் கல்வி கற்க மாணவர் வீசா வழங்குவதாகக் கூறி கல்வி ஆலோசனை நிறுவனத்தை நடத்தி நிதி மோசடி செய்த நபரை கொழும்பு மோசடி விசாரணைப் பணியக அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.

செவன் ஸ்டார் மற்றும் ஐ.எம்.சி க்ளோப் என்ற இரண்டு உலகளாவிய கல்வி ஆலோசனை நிறுவனங்களை நடத்தி இந்த பாரிய நிதி மோசடியில் மொஹமட் ரெம் அஹமட் பஸ்லி என்றபவர் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு மோசடி விசாரணை பிரிவு குறிப்பிட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இந்த மோசடியை நடத்தி வருவதாகவும், இவர் மீது 33 பேர் பல்வேறு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாடுகளுக்கமைய, சுமார் மூன்று முதல் நான்கு கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாக மோசடி விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது. நிரந்தர வசிப்பிடமின்றி இடம் விட்டு இடம் தலைமறைவாக வாழ்ந்து வரும் இவர், மாளிகாவத்தை போதிராஜா மாவத்தையில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த போதே கைது செய்யப்பட்டதாக மோசடி விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நபரின் மோசடியில் சிக்கிய நபர் ஒருவர் கடந்த ஒகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு 06 இல் செய்த முறைப்பாட்டிற்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.முறைப்பாட்டாளரிடம் மேற்கொள்ளப்பட்ட மோசடியின் தொகை 27 லட்சத்து 30ஆயிரம் ரூபாய் எனவும் மோசடி விசாரணை பிரிவு குறிப்பிட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!