அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை மதிப்பதில்லை-சுதந்திரக்கட்சி

வரவு செலவுத்திட்டத்தில் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கும் அரசாங்கம் தனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதாக நினைப்பதால், எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை மதிக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜேலால் டி சில்வா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தில் தமது உற்ற நண்பர்கள் குழுவையும் வெளிநாட்டு பல்தேசிய நிறுவனங்களையும் மகிழ்விக்க நடவடிக்கை எடுத்துள்ளது.புகையிலை நிறுவனங்களிடம் பெரியளவில் வரி அறவீடுகளை பெற முடியும் என்ற போதிலும் அரசாங்கம் பீடிக்கு இரண்டு ரூபா வரி விதித்துள்ளதன் மூலம் சாதாரண வறிய மக்கள் தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாடு தெளிவாகியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வரவு செலவுத்திட்டம் நாட்டில் இருக்கும் வருமானத்தை இழக்க செய்து, நாட்டை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும் ஆவணம் எனவும் ஷான் விஜேலால் டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!