6 தமிழர்களின் விடுதலையை எதிர்த்து சீராய்வு மனு – காங்கிரஸ் முடிவு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991-ம் ஆண்டு குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக 41 பேரை சி.பி.ஐ. கைது செய்திருந்தது. இதில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனையும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டு இருந்தது. பின்னர் தமிழக அரசின் பரிந்துரையின்பேரில் நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கவர்னர் உத்தரவிட்டார்.
    
பின்னர் எஞ்சிய 3 பேரின் மரண தண்டனையும் சுப்ரீம் கோர்ட்டால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து 7 பேரும் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். இதில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அவரை விடுதலை செய்து கடந்த மே மாதம் உத்தரவிட்டது. அதன்படி அவர் விடுதலையானார். இதைத்தொடர்ந்து பேரறிவாளன் தீர்ப்பை அடிப்படையாக கொண்டு மீதமுள்ள 6 பேரையும் கடந்த 11-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது.

இதையடுத்து அவர்கள் 6 பேரும் மறுநாளே (12-ந் தேதி) விடுதலை செய்யப்பட்டனர். இந்த விடுதலைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அத்துடன் 6 பேர் விடுதலையை எதிர்த்து கடந்த 17-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்தது. 6 பேர் மேல்முறையீடு விவகாரத்தில் மத்திய அரசின் வாதத்தை சுப்ரீம் கோர்ட்டு கேட்கவில்லை எனவும், விடுவிக்கப்பட்ட 6 பேரில் 4 பேர் இலங்கையை சேர்ந்தவர்களாக இருந்தபோதும் மத்திய அரசின் வாதங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கவில்லை எனவும் மத்திய அரசு தனது மனுவில் கூறியிருந்தது.

இந்த நிலையில் ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாரத்தில் இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பது தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!