குழப்பத்தை தவிர்க்கவே விளக்கம் கோரினாராம் மைத்திரி

தனது பதவிக்காலம் தொடர்பாக உள்ள குழப்பத்தை தவிர்த்துக் கொள்ளும் நோக்குடனேயே உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“சிறிலங்கா அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஏற்ப, தற்போதைய அதிபரின் பதவிக்காலம் தொடர்பான இரு வேறு வகையான கருத்துக்கள்- சட்டம், சிவில் மற்றும் அரசியல் துறைகளில் நிலவுகின்றன.

இதனால் ஏற்படக் கூடிய குழப்பத்தை தவிர்த்துக் கொள்ளும் நோக்குடன், சிறிலங்கா அதிபர் தமது பதவிக்காலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் அதிபர் ஒருவருக்கு அவ்வாறு விளக்கம் கோருவதற்கான அதிகாரம் உள்ளது.

இதற்கு முன் பதவி வகித்த அதிபர்களும் தமது பதவிக்காலம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்தனர்.

இது ஜனநாயக ஆட்சியமைப்பின் அரசியலமைப்பில் காணப்படும் ஒரு சிறப்பம்சமாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: , ,