மோசடி செய்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை!

ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு அரச சொத்துக்களுக்கும் உடமைகளுக்கும் இழப்பினை ஏற்படுத்தும் சகலருக்கும் அரசியல் கட்சி, பதவி வேறுபாடுகளின்றி உயர்ந்தபட்ச தண்டனை வழங்குவதற்கான பின்னணி உருவாக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை, தியசென்புர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் நோக்குடன் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெறும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு மக்கள் பிரதிநிதியும் தவறிழைப்பதற்கு தான் வாய்ப்பளிக்கப்போதில்லை என்று தெரிவித்தார்.

தவறிழைக்கும் அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு உயர்ந்தபட்ச தண்டனையை வழங்க கட்சியின் தலைவர் என்ற வகையில் தயக்கமின்றி செயற்படவுள்ளதாக வலியுறுத்திய ஜனாதிபதி , ஊழல், மோசடிகளின்றி மக்களை நேசிக்கும் உண்மையான மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க உறுதியுடன் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை அவ்வண்ணமே நிறைவேற்றுவதற்கான தீர்மானங்களை மேற்கொள்ளும் வகையில் கடந்த மூன்று வருடங்களாக செயற்பட்டதுடன், விவசாயிகளின் பிரச்சினையை தீர்த்து, அவர்களது தேவைகளை நிறைவேற்றி வைக்க முடிந்தமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: , ,