மீண்டும் களமிறங்கும் நோக்கியா ஆஷா

நோக்கியாவின் ஆஷா பிராண்டு சாதனங்களை மீண்டும் வெளியிட எச்.எம்.டி. குளோபல் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நோக்கியா பிராண்டு பயன்படுத்தி ஸ்மார்ட்போன்களை எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. நோக்கியா பெயரில் இந்தியாவில் ஆறு ஸ்மார்ட்போன்களை எச்.எம்.டி. குளோபல் ஏற்கனவே வெளியிட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டின் துவக்கத்திலேயே நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்திருக்கிறது.

அந்தவகையில் நோக்கியாவின் பிரபல ஆஷா சீரிஸ் தலைப்பில் சாதனங்களை தயாரித்து விற்பனை செய்ய எச்.எம்.டி. குளோபல் திட்டமிட்டிருப்பதாகவும், இதற்கான காப்புரிமைகளை அந்நிறுவனம் கோரியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2011-ம் ஆண்டு ஆஷா சீரிஸ் பயன்படுத்துவதற்கான காப்புரிமை பதிவு செய்யப்பட்ட நிலையில், ஜனவரி 9-ம் தேதி இந்த காப்புரிமை எச்.எம்.டி. பெயரில் மாற்றப்பட்டுள்ளது.

புதிய காப்புரிமையை பயன்படுத்தி எச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஸ்மார்ட்போன், டெலிபோன் மற்றும் மொபைல்போன்களில் பயன்படுத்தக்கூடிய கம்ப்யூட்டர் மென்பொருள்களை உருவாக்க முடியும். இத்துடன் மொபைல் டெலிபோன்களில் பயன்படுத்தக்கூடிய வயர்லெஸ் தகவல் பரிமாற்றம் செய்யும் கம்ப்யூட்டர் மென்பொருள்களையும் உருவாக்க முடியும்.

ஸ்மார்ட்போன் சந்தையில் 2011-ம் ஆண்டு களமிறங்கிய நோக்கியா ஆஷா சீரிஸ் 2014-இல் நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாஃப்ட் கைப்பற்றியதும் நிறுத்தப்பட்டது. நோக்கியா ஆஷா சீரிஸ் பெயரில் அதிகளவு பட்ஜெட் ரக மொபைல் போன்கள், டூயல் சிம் கார்டு ஸ்லாட் கொண்ட சாதனங்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டன.

நோக்கியா ஆஷா பெயரில் வெளியான கடைசி சாதனமாக நோக்கியா ஆஷா 230 இருக்கிறது. இந்த கைப்பேசி வாட்ஸ்அப் கீ கொண்ட முதல் சாதனமாக அமைந்ததோடு 2 எம்பி பிரைமரி கேமரா மற்றும் சீரிஸ் 40 ஓ.எஸ். கொண்டு இயங்கின. சந்தையில் நோக்கியா ஆஷா சீரிஸ் வெளியாவது குறித்த விரிவான தகவல்கள் வெளியாகாத நிலையில், இந்த பிராண்டு மீண்டும் களமிறங்க இருப்பது மட்டும் தெரியவந்திருக்கிறது.

முந்தைய வெளியீடு போன்றே புதிய ஆஷா சீரிஸ் சாதனங்களும் பட்ஜெட் விலையில் வெளியிடப்படலாம் என்றும் இவற்றில் பெரும்பாலும் ஆண்ட்ராய்டு கோ தளம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வரை அனைத்து பட்ஜெட்டிலும் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை வெளியிட எச்.எம்.டி. குளோபல் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

இதை உறுதி செய்யும் வகையில் நோக்கியா 6, நோக்கியா 1, நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 8 உள்ளிட்ட மாடல்கள் வெவ்வேறு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. முதற்கட்டமாக நோக்கியா 6 (2018) சீனாவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்திய வெளியீடு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: , ,