ஆப்கானிஸ்தானில் ஆண்கள் சுற்றி நிற்க பெண்களுக்கு வழங்கப்பட்ட கொடூர தண்டனை!

ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் மைதானத்தில் 3 பெண்கள் உட்பட 12 பேருக்கு தாலிபான்கள் கசையடி தண்டனை வழங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றினார்கள், இதையடுத்து அங்கு இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான கட்டுப்பாடுகளையும், தண்டனைகளையும் தாலிபான்கள் நிறைவேற்றி வருகின்றனர்.
    
தாலிபான்களின் ஆட்சிக்கு கீழ் பெண்களின் சுதந்திரம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது, பெண்களின் கல்வி, ஆடை சுதந்திரம், போன்ற பலவற்றிலும் தாலிபான்கள் கட்டுப்பாடுகளை விதித்து அடக்குமுறையை கையாண்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருட்டு மற்றும் பாலியல் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்ட 3 பெண்கள் மற்றும் 9 ஆண்கள் உட்பட மொத்தம் 12 பேருக்கு நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அந்நாட்டின் லோகர் மாகாணத்தின் பல் ஆலம் நகர் மைதானத்தில் வைத்து தாலிபான்கள் கசையடி தண்டனை கொடுத்துள்ளனர்.

12 பேரின் மீதும் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த கசையடி தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தண்டனை நிறைவேற்றப்படுவதை பார்பதற்காக மைதானத்திற்கு வருகை தருமாறு சமூக ஊடகங்களில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதனடிப்படையில் காலை மைதானத்தில் குவிந்து இருந்த ஆண் பார்வையாளர்கள் முன்னிலையில், 12 பேருக்கும் 39 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!