அவுஸ்திரேலிய பொலிஸார் தேடிவந்த இந்திய கொலையாளி டெல்லியில் கைது!

அவுஸ்திரேலியாவில் இளம்பெண்ணை கொன்றுவிட்டு இந்தியாவிற்கு தப்பிச்சென்ற நபர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் கைது செய்யப்பட்டார். 2018-ஆம் ஆண்டு குயின்ஸ்லாந்தில் அவுஸ்திரேலியப் பெண்ணைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இந்திய செவிலியரை டெல்லி காவல்துறை கைது செய்தது.
    
கொலை செய்துவிட்டு இந்தியாவிற்கு தப்பியோட்டம் 38 வயதான ராஜ்விந்தர் சிங், 2018-ல் இந்தியாவுக்கு வருவதற்கு முன், டோயா கார்டிங்லி (Toyah Cordingley) எனும் 24 வயது இளம்பெண்ணை கடற்கரையில் கொலை செய்ததாக கூறப்படுகிறது. குயின்ஸ்லாந்தின் வாங்கட்டி கடற்கரையில் மருந்தகத் தொழிலாளியான கார்டிங்லி, தனது நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது ராஜ்விந்தர் சிங்கால் கொல்லப்பட்டார்.

ராஜ்விந்தர் சிங் இரண்டு நாட்களுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறினார். அப்போது அவர் பார்த்துக்கொண்டிருந்த வேலையை மட்டும் விட்டுவிட்டு வரவில்லை, அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டு இந்தியா சென்றார். இதையடுத்து, அவரை கைது செய்ய குயின்ஸ்லாந்து காவல்துறை அவரது தலைக்கு 1 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வெகுமதியாக அறிவித்தது. இது குயின்ஸ்லாந்து காவல்துறை அறிவித்ததிலேயே மிகப்பெரிய பரிசு தொகையாகும். அவுஸ்திரேலிய அரசாங்கம், மார்ச் 2021-ல், சிங்கை நாடு கடத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்தது.

இந்த கோரிக்கைக்கு இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, டெல்லி பொலிஸார் இன்று அவரை டெல்லியில் வைத்து கைது செய்தனர்.
பஞ்சாபின் பட்டர் கலனைச் சேர்ந்த ராஜ்விந்தர் சிங், அவுஸ்திரேலியாவின் இன்னிஸ்ஃபைல் டவுனில் வசித்து வந்தார், அங்கு அவர் செவிலியர் உதவியாளராக பணிபுரிந்துகொண்டிருந்தார்.
2018, அக்டோபர் 21 ஞாயிற்றுக்கிழமை அன்று கார்டிங்லி காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. மறுநாள் காலை கெய்ர்ன்ஸுக்கு வடக்கே உள்ள வாங்கெட்டி கடற்கரையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!