காடுகளில் சட்டவிரோத கடத்தல்களை தடுக்க இராணுவ தொண்டர் படையணி! – சரத் பொன்சேகா திட்டம்

காடுகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத வியாபாரங்களையும் கடத்தல்களையும் கட்டுப்படுத்த இராணுவ தொண்டர் படையணியை ஈடுபடுத்தவுள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

இதற்காக விசேட சுற்றிவளைப்புத் தேடுதல்களும் நடத்தப்படவுள்ளன. இதற்கு இராணுவ தொண்டர் படையணிக்கு 10,000 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

காடுகளில் இடம்பெறும் கடத்தலைத் தடுக்க வனசீவராசி அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டத்துக்கு தொண்டர் படையணி அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ள அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளார். கடந்த காலங்களில் 4000 கன கிலோ மீற்றர் அளவிலான காடுகளில் பாரியளவு பலவிதமான வியாபாரங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக பெறுமதிவாய்ந்த மரங்களை வெட்டி களவாக விற்பது, யானைத் தந்த வியாபாரம், ஆயுர்வேத மருத்துவ செடிகளை திருடி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தல், மிருகங்களின் பாகங்கள், மிருகங்களை வெளிநாட்டுக்கு விற்றல், மதுபான வியாபாரம், வேட்டையாடுதல் போன்று இன்னும் பல வியாபாரங்கள் காடுகளில் இடம்பெறுகின்றன. அவற்றை முற்றாக ஒழிப்பதே அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகாவின் நோக்கமாகும்.

அது மாத்திரமல்ல காடுகளை வெட்டி களவாக வீடுகளை அமைத்தல் உள்ளிட்ட இவ் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்தவோ அல்லது முற்றாக ஒழிக்கவோ வனசீவராசி அமைச்சின் கீழ் போதியளவு அதிகாரிகள் இல்லை. அதனால் விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தொண்டர் படையணி அங்கத்தவர்களைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இராணுவத்தில் உள்ளோரை எந்த வேளையிலும் பெற்றுகொடுக்க முடியுமென இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!