பேச்சின் மூலமான தீர்வு! சர்வதேசத்தின் அழுத்தத்தைக் கோருகின்றார் சம்பந்தன்

தமிழரின் அரசியல் அபிலாஷைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காண்பது என்பது கானல்நீரா மாறிக்கொண்டிருக்கும் கனவு எனவும் தமிழ் அரசியல் கட்சிகளால் பெரிய அளவில் முன்னேற முடியவில்லை. எனவே, அனைத்துலக சமூகம் தலைமை தாங்கி வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு ஏற்பாட்டுக்கு அழுத்தம் கொடுப்பது கடமையாகும்” என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புரொன்ட்லைன் எனும் சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு கூறியுள்ளார். 
வடக்கு, கிழக்கில் தற்போது காணப்படும் நிலை தொடர்ந்தால் தமிழ் மக்கள் தங்கள் அடையாளம், சுயமரியாதை, ஏன் கௌரவத்தைக் கூடப் பேண முடியாத நிலையேற்படும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

நேர்காணலின் முழு விவரம் வருமாறு, 
கேள்வி:- அரகலயா (சிங்களவர்களின் போராட்டம்) பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? ஆட்சியில் இருந்தவர்கள் அனைவரும் மீண்டும் இலங்கைக்கு வந்து செழித்து வருவதை நாம் காண்கின்றோமே?

பதில்:- பிரதான தவறு செய்தவரை அவர் (ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ச) பதவியில் தொடர முடியாது என்பதை அவர்களால் உணர்த்த முடிந்தது என்ற அர்த்தத்தில் அரகலய வெற்றி பெற்றது. துரதிஷ்டவசமாக, ரணில் விக்ரமசிங்க தனது சொந்தக் காரணங்களுக்காக அரசை ஆதரித்தார். இந்த ஆதரவின் மூலம் அவர் பிரதமராக முடிந்தது. இப்போது, அவர் ஜனாதிபதி. முன்பு அவரை எதிர்த்தவர்களின் ஆதரவுடன் இப்போது ரணில் ஜனாதிபதியானார்.


அரகலயா ஓரளவு வெற்றியடைந்ததுடன், முக்கிய குற்றவாளியான ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ச பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது கேள்வி என்னவென்றால் நம்மிடம் அரசு இருக்கின்றதா? எது அரசு? யார் யாருக்கு ஆதரவு? பொருளாதாரத்தில் அவர்களின் நிலைப்பாடு என்ன? எவருமறியார். இது எல்லாம் மிகவும் குழப்பமாக உள்ளது. என்ன கொள்கைகளைப் பின்பற்றுகிறார்கள் என்றும் தெரியவில்லை. ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் ஒரேயொரு உறுப்பினர்தான். அவர் ராஜபக்‌சக்களின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி.க்களின் ஆதரவுடன் வாழ்கின்றார். தற்போதைய நிலையில், தவிர்க்க முடியாதது மற்றும் நடக்க வேண்டியது பொதுத் தேர்தல்கள்தான்.

யார் ஆட்சியமைக்க வேண்டும் என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைகளையே பின்பற்றுகின்றார் என நான் நினைக்கிறேன். மகிந்த ராஜபக்‌ச (முன்னாள் பிரதமர்), கோட்டபாய ராஜபக்‌ச (முன்னாள் ஜனாதிபதி) மற்றும் பசில் ராஜபக்‌ச (முன்னாள் நிதி அமைச்சர்) ஆகியோரின் நம்பகத்தன்மை கடுமையாக கேள்விக்குள்ளாக்கப்பட்டது. அவர்கள்தான் நாட்டை ஆண்டார்கள். அரகலயவின் உச்சத்தில் மகிந்த ராஜபக்‌ச திருகோணமலையில் (கடற்படைத் தளத்தில்) தலைமறைவாக இருக்க வேண்டியிருந்தது. இந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஏனெனில் இது ( ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் விரும்பினாலும் அந்தக் கட்சியே கட்டுப்படுத்தும் தற்போதைய நிலை) தொடரக்கூடாது. அது இன்னும் நிலைமையை மோசமாகும். பொருளாதாரச் சரிவு எந்த விதத்திலும் விவேகமான முறையில் கையாளப்படுவதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் (அரசு) பிணை எடுப்புக்காக சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றிருந்தனர். இதுவரை, சர்வதேச நாணய நிதியம் எதுவும் கூறவில்லை. இது மிகுந்த கவலை அளிக்கின்றது.

கேள்வி:- அப்படியானால், மக்களிடம் திரும்பிச் செல்வதுதான் ஒரே தீர்வு என்று நினைக்கிறீர்களா?

பதில்:- முழு நாடும் அவர்களுக்கு எதிராக இருந்ததால் அவர்கள் எப்படி தொடர்ந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எந்த அரசுக்கும் எதிர்ப்பின் உச்சம் அது. (ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு) ஏன் (அரகலய) தொடரவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.

இந்த அரசு செல்ல வேண்டும் என்றே மக்கள் விரும்பினர். எனவே, அவர்கள் ஒரு ஆணைக்காக மீண்டும் மக்களிடம் செல்ல வேண்டும். தமிழரின் அரசியல் அபிலாஷைகளுக்கு பேச்சு மூலம் தீர்வு காண்பது என்பது கானல்நீரா மாறிக்கொண்டிருக்கும் கனவு. தமிழர்களுக்கு எந்த இலாபமும் கிடைக்கவில்லை. உண்மையில், வடக்கு மற்றும் கிழக்கில் மக்கள் தொகை மற்றும் கலாசார மாற்றங்கள் காரணமாக அவர்கள் தங்கள் தனித்துவத்தை இழக்கின்றார்கள். தமிழ் அரசியல் கட்சிகளால் பெரிய அளவில் முன்னேற முடியவில்லை.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. தமிழ் மக்கள் சுதந்திரத்தை ஆதரித்தனர். குடியுரிமைச் சட்டம் மற்றும் கிழக்கிலும் வடக்கிலும் பெருமளவிலான சிங்களக் குடியேற்றங்களுக்குப் பிறகு அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது அந்த பகுதிகளில் மக்கள்தொகை அமைப்பை மாற்றியது. தமிழ் மக்கள் அந்தப் பகுதிகளில் சுயாட்சி மற்றும் அதிகாரப் பகிர்வைக் கோரினர். இதுவே (1957) பண்டாரநாயக்கா – செல்வநாயகம் ஒப்பந்தம் மற்றும் (1987) இந்திய – இலங்கை ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையாகும்

இரண்டுமே தமிழ் மக்களின் அடையாளம், பிரதேசம் மற்றும் சுயநிர்ணய உரிமை அல்லது அவர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் உரிமை தொடர்பான ஏற்பாடுகளை உள்ளடக்கியிருந்தன. துரதிஷ்டவசமாக இலங்கை அரசு ஒப்பந்தங்களை மீறியுள்ளது. சிங்கள அரசியல்வாதிகளைப் பொறுத்த வரையில், அவர்கள் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், தமிழர் விரோத நிலைப்பாட்டின் அடிப்படையில் சிங்கள மக்களின் ஆதரவைப் பெறுவதிலேயே முதன்மையாக அக்கறை கொண்டுள்ளனர். இந்நிலைமை தொடரும் வரை ஒன்றும் செய்ய முடியாது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையிலும், பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையிலும் இலங்கை ஒரு தரப்பாக உள்ளது.

இரண்டு உடன்படிக்கைகளும் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை வழங்குகின்றன. நாடு எந்த வகையிலும் துண்டாடப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் பிரிக்கப்படாத இலங்கைக்காக நிற்கின்றோம். அதே சமயம் இப்படியே போக முடியாது. இவ்விடயத்தை நன்கு அறிந்த சர்வதேச சமூகத்தை அணுகுவதைத் தவிர எமக்கு மாற்றுக் கருத்து இல்லை. வடக்கு, கிழக்கு தொடர்பாக சில ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்துலக சமூகம் தலைமை தாங்கி வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு ஏற்பாட்டுக்கு அழுத்தம் கொடுப்பது கடமையாகும் இலங்கை அரசு அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கவில்லை.

ஒரு பக்கம் வடக்கு, கிழக்கில் மீள்குடியேற்றத்தின் மூலம் சிங்கள சனத்தொகை அதிகரித்து வருகின்றது, மறுபுறம் வன்முறைகள் மற்றும் ஸ்திரமற்ற அரசியல் நிலைமைகள் காரணமாக தமிழர்கள் வெளியேறி வருகின்றனர். இப்படியே போனால், மக்கள் தங்கள் அடையாளத்தையும், சுயமரியாதையையும், கண்ணியத்தையும் கூட காப்பாற்ற முடியாமல் போய்விடும். சர்வதேச சமூகம் அதற்கு இடமளிக்கக் கூடாது. இது உலகுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக அமையும். இந்தப் பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் இந்த நாட்டில் அமைதியை அவர்கள் விரும்பினால், இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்” என நேர்காணலில் தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!