தேர்தலை பிற்போட முனையும் அரசுக்கு தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஒத்துழைப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சிக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் செயல்படுகிறாரா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. தோல்வியை தாமதப்படுத்தி கொள்வதற்காகவே அரசாங்கம் தேர்தலை பிற்போட முயற்சிக்கிறது. உள்ளூராட்சி மன்றத்தேர்தல் பிற்போடப்பட்டால் அதன் விளைவை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
    
உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் வினவிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சுயாதீன தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒரு வருட காலத்திற்கு பிற்போடும் போது, அதற்கான உரிய காரணம் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படவில்லை,

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்ட போது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. அரசாங்கத்தின் நோக்கத்திற்கு சார்பாகவே செயற்பட்டது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது,தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளமை வேடிக்கையாக உள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நித்திரையில் இருந்து எழுந்ததை போல் குறிப்பிட்டதன் பின்னர் எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான தடைகளை சூட்சமமான முறையில் ஏற்படுத்தி விட்டு தற்போது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தான் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேடிக்கையாகவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் முயற்சிக்கு சார்பாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகிறது. தோல்வியை பிற்போடுவதற்காக அரசாங்கம் தேர்தலை பிற்போடுகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போட்டால் அதன் விளைவை அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும். வாக்குரிமைக்காக நீதிமன்றத்தை நாட தயாராகவுள்ளோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!