கொழும்பு உட்பட நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்தான மாற்றம்! மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பில் தற்போது பனிமூட்டம் போன்றதொரு நிலையை பகல் நேரத்திலும் காணக்கூடியதாக உள்ளது. எனினும் இந்த பனிமூட்டம் போன்றதொரு நிலையானது காலநிலை காரணமாக ஏற்பட்டதல்ல எனவும், வளி மாசு காரணமாக ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தில் தூசி துகள்கள் அதிகரித்ததன் காரணமாக கொழும்பின் பல பகுதிகள் புகையால் மூடப்பட்டுள்ளன.  காற்றுடன் கூடிய காலநிலையுடன் இந்திய குடாநாட்டில் இருந்து தூசி துகள்கள் நாட்டிற்குள் வருவதனால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக கொழும்பு, மன்னார், வவுனியா, கேகாலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிக சுவாசப்பிரச்சினைகள் இருப்பவர்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இந்த புகைமூட்டம் போன்ற நிலைமை காரணமாக தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம் (லோட்டர்ஸ் டவர்) உள்ளிட்ட கொழும்பின் பல உயரமான கட்டடங்களை கூட தெளிவாக அவதானிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நாடு முழுவதும் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணம் முழுவதும் பனிமூட்டம் நிறைந்த, மப்பும் மந்தாரமுமான கால நிலை ஒரு சில நாட்களாக காணப்படுகிறது, இந்த Gloomy weather காரணமாக ஏதோ மத்திய மலை நாட்டில் இருப்பது போன்ற உணர்வில் எல்லோரும் குழந்தைகளுடன் வெளியில் சுற்றித் திரிவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது என வைத்தியர் பி.எம்.அர்ஷாத் அஹமட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இது மூடுபனி என்றே எல்லோரும் நினைக்கின்றனர். ஆனால், உண்மையில், இது வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக அசுத்தமான, அதிக துணிக்கைகள், தூசுப்படை, நிறைந்த காற்று, இந்தியாவின் புது டில்லி போன்ற வளி மாசடைந்த இடங்களில் இருந்து, இலங்கை வளிமண்டலத்திற்குள் உட்புகுந்ததால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம் என்று பலரும் அச்சம் வெளியிட்டு வருகின்றனர். அதை உறுதிப்படுத்தும் விதமாகவே நமது நாட்டின் எயார் குயாலிட்டியும் கடந்த சில நாட்களாக மோசமடைந்து வருவதை கொழும்பில் உள்ள அமெரிக்கா தூதுவராலய AQI தரவுகள் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், பொதுமக்கள் அதிலும் குறிப்பாக சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள், இந்த நாட்களில், சுவாசம் சம்பந்தப்பட்ட, சளிக் காய்ச்சல் போன்ற நோயாளிகளுக்கு அதிகம் ஆட்படக் கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு. எனவே, மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது நல்லது. அவசியம் இல்லாமல் குழந்தைகளை அழைத்து கொண்டு வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் வெளியே செல்லும் போது முகக்கவசம், தொப்பி போன்றவைகளை அணிந்து கொள்வது பாதுகாப்பானது என குறிப்பிட்டுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!