இலங்கை விடயத்தில் இந்தியாவின் பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது: இந்திய அரசாங்கம்

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடுகளுக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை என்றால், இந்தியா தனது பொறுப்பைத் தட்டிக்கழிப்பதாக அமைந்துவிடும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரத்திற்குப் பின்னரான மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கைக்கு இந்தியா வழங்கிய பொருளாதார ஆதரவு, முழு இலங்கை நாட்டிற்கும் உரியது அன்றி எந்தவொரு இனவாத அணுகுமுறையையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை.

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வரைவுத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை தொடர்பில், இந்திய அமைச்சரிடம் ம.தி.மு.க உறுப்பினர் வைகோ விளக்கம் கேட்டிருந்தார்.

இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர், குழந்தைகள் கொல்லப்பட்டனர், இலங்கையில் அப்போதைய அரசாங்கம் ஆயுதம் கொடுத்தது, இன்னும் இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக உள்ளது என்று வைகோ குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக வாக்களிப்பதில் இருந்து இந்தியா விலகியிருப்பது நீண்டகால நிலைப்பாட்டிற்கு இணங்க மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.

இலங்கை தேசத்திற்கான ஆதரவில், தமிழ் சமூகத்தையும் உள்ளடக்கிய முழு இலங்கைக்கும் இந்தியா ஆதரவளிக்கிறது. ஆதரவு வழங்குவதில் எந்தவொரு இனவாத அணுகுமுறையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கையொப்பமிடப்பட்ட 1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் நிலை தொடர்ந்தும் மாற்றங்களுக்கு அடிப்படையாக இருக்கும் என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!