மோடியின் காட்டுமிராண்டித்தனமான நியூ இந்தியா: – ராகுல் காந்தி

ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டத்துக்குட்பட்ட ராம்கர் பகுதியில் கடந்த சனிக்கிழமை பசு கடத்தியதாக ரக்பர் கான் என்ற 28 வயது வாலிபர் ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். குற்றுயிராக இருந்த அந்த வாலிபரை தூக்கிச் சென்ற போலீசார், அவருக்கு முதலுதவி அளிக்க அக்கறை காட்டாமல் முதலில் பசுவை பாதுகாப்பான இடத்தில் விடுவதில் ஆர்வம் காட்டினர்.

அந்த வாலிபரை சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் ஆசுவாசமாக ஒரு டீக்கடையில் வாகனத்தை நிறுத்தி சற்றுநேரம் களைப்பாறி பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. காயமடைந்த 4 மணிநேரம் கழித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் ரக்பர் கானின் உயிரை காப்பாற்ற முடியவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது.

அல்வார் படுகொலை தொடர்பாக விசாரித்து 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ராஜஸ்தான் மாநில அரசை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை கடுமையாக இன்று சாடியுள்ளார். ‘உயிருக்கு ஆபத்தானவரை காப்பாற்ற கொண்டு சென்ற போலீசாருக்கு கடமைக்கு இடையில் தேனீர் ஓய்வா? வெறுப்புணர்வின் மூலம் மனிதநேயம் மாற்றப்பட்டு, மக்கள் நசுக்கி சாகடிக்கப்படுவதற்கு பெயர்தான் மோடியின் காட்டுமிராண்டித்தனமான ‘நியூ இந்தியா’ என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!