10 ஆண்டுகளில் 12,186 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு

சிறிலங்காவில் 2008ஆம் ஆண்டுக்கும், 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 12,186 விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே, இதுபற்றிய தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்திடம், ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்த்தன, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் தொடர்பாக, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். எனினும், இந்த விண்ணப்பம் முதலில் நிராகரிக்கப்பட்டது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகிய காரணங்களைக் காட்டியே இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

எனினும், இந்த தரவுகளால் தேசிய பாதுகாப்புக்கோ, தனியுரிமைக்கோ ஆபத்து ஏற்படாது என்று முன்வைக்கப்பட்ட வாதத்தை அடுத்து, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சில தகவல்களை வழங்கியுள்ளார்.

இதற்கமைய, 2008ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடையில், 12,186 விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில், 4,156 பேர், 20 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். இவர்களில் 1,084 பேர் பெண் போராளிகள்.

2010ஆம் ஆண்டிலேயே அதிக பட்சமாக, 5,586 போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டது.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில், 594 பேர் சிறுவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!