ஐதேக செயற்குழுவில் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது விஜயகலா குறித்த விசாரணை அறிக்கை

விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, இன்று ஐதேக செயற்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் விஜயகலா மகேஸ்வரன் நிகழ்த்திய உரையை அடுத்து, கொழும்பு அரசியலில் பெரும் சர்ச்சை வெடித்தது.

இதையடுத்து, இதுகுறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க நான்கு பேர் கொண்ட குழுவொன்றை ஐக்கிய தேசியக் கட்சி நியமித்திருந்தது.

இந்தக் குழு தமது விசாரணைகளை முடித்துள்ளதாகவும், சிறிகோத்தாவில் இன்று நடைபெறவுள்ள கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் கட்சியின் பொதுச்செயலரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

விஜயகலாவின் உரை தொடர்பாக, விசாரணை நடத்தியுள்ள இந்தக் குழு, அவருக்கு எதிராக கட்சியின் தலைமை எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக இந்த அறிக்கையில் பரிந்துரைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!