நண்பரின் மகனுக்காக 3,300 மணி நேரம் கூடுதலாக உழைத்த தொழிலாளர்கள்!

நண்பரின் மகனின் புற்றுநோய் சிகிச்சைக்காக, ஜெர்மனியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் சக தொழிலாளர்கள் சுமார் 3,300 மணி நேரம் கூடுதலாக வேலை பார்த்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜெர்மனி நாட்டின் ஹீஸ் நகரில் உள்ள டிசைனர் கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிலாளியின் மகனுக்கு லுகேமியா என்ற புற்றுநோய் ஏற்பட்டது.

இதற்காக நீண்ட நாள்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அவருடன் ஒருவர் எப்போதும் துணையாயிருக்க வேண்டும் எனவும் டாக்டர்கள் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, தனது நிலையை விளக்கி நிறுவனத்தில் ஒரு ஆண்டுக்கு விடுமுறை கேட்டு விண்ணப்பித்தார். அவரது கோரிக்கையை பரிசீலித்த மேலாளர், அவருக்கு மற்ற தொழிலாளர்கள் கூடுதலாக வேலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து, நண்பரது மகனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு சக தொழிலாளர்களும் கூடுதலாக வேலை பார்த்து வந்தனர். இதுவரை சுமார் 3300 மணி நேரம் வேலை பார்த்துள்ளனர்.

தற்போது மகனின் சிகிச்சை முடிந்து 9 மாதங்களாகி விட்டது. சிறுவனும் நன்கு குணமாகி வீடு திரும்பினான். இதுதொடர்பாக சிறுவனின் தந்தை கூறுகையில், எனது மகனை பார்த்துக் கொள்வதற்காக் நீண்ட விடுமுறை எடுத்தேன். நான் செய்ய வேண்டிய எனது வேலையை சக தொழிலாளர்கள் செய்தது பெருமிதமாக உள்ளது அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன். விரைவில் வேலையில் சேர்ந்து விடுவேன் என நெகிழ்ச்சி அடைந்துள்ளார். நண்பரின் மகனுக்காக சக தொழிலாளர்கள் சுமார் 3300 மணி நேரம் கூடுதலாக வேலை பார்த்த சம்பவன் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!