கூகுள் தேடலில் பிரியாணியை ஓரம் கட்டிய பக்கோடா!

என்னப்பா பக்கோடால கல்லும், மண்ணுமா இருக்கு… அதுவா… நான் சிவில் இன்ஜினீயர் சார்! சமீபத்தில் இணையத்தைக் கலக்கிக்கொண்டிருக்கும் மீம் இது. மாணவர்கள் தொடங்கி புதுச்சேரி முதலமைச்சர் நாரயணசாமி வரை வீதிகளில் பக்கோடா விற்றுத் தங்களின் எதிர்ப்பை பக்கோடா போராட்டத்தின் மூலம் பதிவு செய்து வருகிறார்கள்.இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று மேட்டூரில் “பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு படித்த மாணவர்களை பக்கோடா விற்றுப் பிழைக்கலாம் என்று வாழ வழிகாட்டிய… பாரதப் பிரதமர் மோடி பல்லாண்டு வாழ்க” என்று சர்க்காஸமாகக் கலாய்த்து தள்ளுகின்றனர்.

பிரதமர் மோடி வேலைவாய்ப்புக் குறித்த கேள்விக்கு பக்கோடா போடுவதும் வேலைதான் என்று சமீபத்தில் கூறியது சர்ச்சைக்குள்ளானது. பல இடங்களில் பக்கோடா போடும் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் பக்கோடா சத்தமில்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. கூகுள் தேடலில் பக்கோடா முதலிடம் பிடித்துள்ளது.

வழக்கமாக கூகுளில் ஞாயிற்றுக்கிழமையானால் அதிகம் ட்ரெண்டாகும் உணவு பிரியாணிதான். ஆனால், இந்த வாரம் பிரியாணியை ஓரம் கட்டி வைரலாக ட்ரெண்டானது ‘பக்கோடா’ தான்.

ட்விட்டரில் எதிர்க்கட்சிகள்,சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் ஹேஸ்டேக் #பக்கோடா என்று ட்வீட்டுகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த வாரத்தில் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக மாறியுள்ளது பக்கோடா!

இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட இடங்கள்: இந்தியாவில் கடந்த 7 நாள்களில் ‘பக்கோடா’ என்ற வார்த்தையை அதிகம் கூகுளில் தேடியது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்.அதைத் தொடர்ந்து அதிகம் தேடப்பட்டது புதுச்சேரியில்.இந்த இரண்டுமே யூனியன் பிரதேசம் என்பதுதான் ஆச்சர்யம். பக்கோடாவை அதிகம் தேடிய மாநிலமாக தமிழ்நாடு இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பக்கோடா என்ற வார்த்தையை தமிழகத்தில் அதிகம் தேடிய ஊர் நெய்வேலி.

பக்கோடா என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியது என்னவோ மோடிதான் என்றாலும் கூகுளில் அதிகம் தேடப்பட்டது ‘அமித்ஷா ஆன் பக்கோடா’ ‘அமித்ஷா பக்கோடா’ என்பதுதான். கூகுளில் பக்கோடா குறித்த படங்களைத் தேடியதில் உத்தரகாண்ட் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.’அமித்ஷா பக்கோடா’ , ‘ பக்கோடா பாலிடிக்ஸ்’ ஆகிய வார்த்தைகளில் அதிகப்படியான படங்கள் தேடப்பட்டுள்ளன.

யூ-டியூப் தேடலில் அதிகம் தேடியது புதுச்சேரி. அதைத்தொடர்ந்து பக்கோடா குறித்து யூ-டியூபில் அதிகம் அலசியது நம் தமிழகம்தான். ‘அமித் ஷா இன் ராஜ்ய சபா’ ‘பக்கோடா யோஜனா’ ‘மோடி பக்கோடா இன்டர்வ்யூ’ ‘பக்கோடா பட்ஜெட்’ என இஷ்டத்திற்கு யூ-டியூபில் தட்டியுள்ளனர் நெட்டிசன்கள். இந்தியாவைத் தவிர ‘பக்கோடா’ என்ற வார்த்தையை பஹ்ரைன்,ஐக்கிய அரபு நாடுகள்,கத்தார்,ஓமன் என்று இஸ்லாமிய தேசங்கள் அதிகம் தேடியுள்ளது ஆச்சர்யத்தைத் தருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,