இலைகளில் காணப்படும் மருத்துவ குணங்கள்.

இயற்கையாகவே பல வகை இலைகளில் மருத்துவ குணங்கள் காணப்படுகின்றன. இலைகளை எவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் பலன்களை பெறலாம்.

புளிய இலை.
புளிய இலையையும், வேப்பிலையையும் சேர்த்து இடித்து நீர் விட்டுக் காய்ச்சிப் புண்களைக் கழுவி வர, ஆறாத புண்களும் ஆறி விடும்.
புளிய இலையை நசுக்கி நீர் விட்டுக் கொதிக்க வைத்து கீல்வாயு காரணமாக ஏற்பட்ட வீக்கங்களுக்கு பற்றிட்டு வர குணம் பெறலாம்.

நறுவிலி இலை
நறுவிலி இலையை இடித்து சாறு எடுத்து முகத்தில் காணப்படும் பரு அல்லது கொப்புளங்களுக்குத் தடவி வர அவை மறையத் தொடங்கும்.

நாவல் கொழுந்து இலை
நாவல் கொழுந்து இலையை ஏலம் சேர்த்து அரைத்து, ஆட்டுப் பாலுடன் கலந்து உட்கொள்ள, செரியாமல் போகும் கழிச்சல், சீதக்கழிச்சல் நீங்கி விடும்.

நுணா இலை
நுணா இலை மற்றும் பழத்தையும் குடி நீராக்கி அருந்த பெண்களின் மாதவிடாய்ப் போக்கைச் சரி செய்யும்.

நெல்லி மரத்தின் இலை
நெல்லி மரத்தின் இலைக் கொழுந்தினை அரைத்து மோரில் கலந்து அருந்த சீதக்கழிச்சல் நீங்கும்.

நொச்சி இலை
நொச்சி இலையை சுக்கு சேர்த்து அரைத்து கன்னப் பொறிகளில் பற்றிட தலை வலி நீங்கும்.
நொச்சி இலைகளை வேக வைத்து நீராவி பிடித்தால் வியர்வை உண்டாகி, ஜீரம் தணியும், உடல் வலியும் தணியும்.
நொச்சி இலைக் குடிநீர் அனைத்து வகை ஜீரங்களையும் குணப்படுத்தும்.

பப்பாளி இலை
பப்பாசி இலைகளை இலேசாக நசுக்கி, வதக்கி, பால் கொடுத்து வரும் தாய்மார்களின் மார்பகங்களில் கட்டினால், பால் பெருக்கு கிடைக்கும்.
பப்பாளி இலையை வெந்நீரில் இட்டு அதனை ஒத்தடமிட நரம்புத் தளர்ச்சி, நரம்பு வலி குணமாகும். இலையை நெருப்பில் வாட்டி வைத்தும் கட்டலாம்.

பவள மல்லியின் இலை
பவள மல்லியின் இலைக் கொழுந்தை இஞ்சிச் சாற்றில் அரைத்து, தினமும் இரு வேளை உட்கொண்டு வர ஜீரம் குணம் பெறும். இலைகளை வெந்நீரில் இட்டு, நன்கு ஊற வைத்து, தினம் இரு வேளை உட்கொண்டு வர முதுகு வலி, காய்ச்சல் குணம் பெறும்.
பவள மல்லியின் இலைச் சாற்றில் உப்பும், தேனும் கலந்து உட்கொண்டால் புழுக்கள் வெளியேறி விடும். இக்குடிநீர் மலம் கழியவும் உதவும்.

பூவரசு மரத்தின் இலை
பூவரசு மரத்தின் இலையை அரைத்து வீக்கங்கள் மேல் கட்டலாம். தேமல் போன்ற சரும வியாதிகளுக்கும் பற்றிடலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,