சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக இறுதி முடிவு எடுக்க தடை: ஐகோர்ட்டு உத்தரவு

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக இறுதி முடிவு எடுக்க வருமான வரித்துறைக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமாக சென்னை, மதுரையில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1-ந் தேதிகளில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

அப்போது பல கோடி ரூபாய் வருமானத்துக்கு அன்புச்செழியன் முறையான கணக்கை வருமான வரித்துறையினருக்கு காட்டாமல், வரி ஏய்ப்பு செய்துள்ளதை கண்டுபிடித்தனர். பின்னர், வருமானத்தை மறைத்தும், கணக்கை காட்டாமலும் இருந்ததற்காக அபராத வட்டியுடன், வருமான வரிச்சட்டத்தின் கீழ் குற்ற நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்று அன்புச்செழியனுக்கு நோட்டீசு அனுப்பினர்.

இந்த குற்றச்சாட்டுகளை எதிர்த்தும், வருமான வரி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கோரியும் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 23-ந்தேதி வருமான வரித்துறை தீர்வு ஆணையத்தில் அன்புச்செழியன் மனு செய்தார். ஆனால், அன்புச்செழியன் ரூ.357 கோடிக்கான பணப்பரிவர்த்தனைகளுக்கு கணக்கு காட்டாமல் வெறும் ரூ.175 கோடிக்கு மட்டுமே கணக்கு காட்டியுள்ளதாகக் கூறி அந்த மனுவை ஆணையம் நிராகரித்தது.

அதையடுத்து இரண்டாவது முறையாக அன்புச்செழியன் தாக்கல் செய்த மனுவையும் அந்த ஆணையம் தள்ளுபடி செய்தது.

வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கைகளை எதிர்த்து அன்புச் செழியன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் அன்புச்செழியன் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். அன்புச்செழியன் சார்பில் மூத்த வக்கீல் (அட்வகேட் ஜெனரல்) விஜய் நாராயண் ஆஜராகி வாதிட்டார்.

அவர் தன் வாதத்தில், ‘வருமான வரித்துறை தீர்வு ஆணையம், வருமான வரித்துறை சட்டத்தின்படி தாக்கல் செய்யப்பட்ட வருமானத்திற்கான ஆவணங்களை சரியாக பரிசீலிக்காமல் அதை நிராகரித்துள்ளது’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘அன்புச்செழியனின் வருமானம் குறித்து வருமான வரித்துறை கணக்கீடு செய்ய எந்த தடையும் இல்லை. ஆனால் இந்த கணக்கீட்டின் அடிப்படையில் இறுதி முடிவை வருமான வரித்துறை எடுக்கக்கூடாது’ என்று தடைவிதித்து உத்தரவிட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!