மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு எதிர்த்தால் ஆட்சி கலைந்து விடும்: – சீமான்

தஞ்சை பர்மா காலனியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொடியேற்று விழா இன்று நடந்தது. இதில் கட்சியின் மாநில ஒருங் கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கொடியேற்றினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேளாண் குடிமக்களும், மீனவர்களும் இங்கிருந்து வெளியேற விரும்பவில்லை. ஆனால் மத்திய அரசு இவர் களை வெளியேற்றி விட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுப்பதற்கு முயற்சிக்கிறது. ஒரே நாடு, ஒரே இனம் என்று கூறி வரும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் கொடுக்காமல் துரோகம் செய்கிறார். இதேபோல் ஹைட்ரோ கார்பன், நிலக்கரி, மீத்தேன் போன்ற திட்டங்களை நாங்கள் எதிர்த்தால் மனிதாபிமான மற்றவர்கள், தேச துரோகிகள் என கூறுகிறார்கள். டெல்டா மாவட்டங்களில் 710 இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் குழாய் பதித்து வருகிறது. தகப்பன் இல்லாத வீடு போல, தலைவன் இல்லாத நாடாக இந்தியா உள்ளது. தமிழகத்தில் மத்திய அரசின் பினாமி ஆட்சி தான் நடந்து வருகிறது.

மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு எதிர்த்தால் காலையில் ஆட்சி கலைந்து விடும். 8 கோடி மக்கள் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வழக்குகள் தொடரப்பட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வில்லை. சுப்ரீம் கோர்ட்டு 2 முறை அழுத்தம் கொடுத்தும் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வில்லை. தமிழகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் போராடி வருகிறார்கள். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் மக்கள் ஏன் போராட போகிறார்கள்? மக்கள் போராட்டம் நடத்த எடப்பாடி அரசு தான் தூண்டி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: