பதவி விலக ரணில் மறுப்பு – மைத்திரியுடனான பேச்சில் இழுபறி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்றிரவு நடத்தப்பட்ட பேச்சுக்கள் முடிவு எதுவும் எட்டப்படாமலேயே முடிந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மஹகமசேகர மாவத்தையில் உள்ள சிறிலங்கா அதிபரின் அதிகாரபூர்வ வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இதில் உள்ளூராட்சித் தேர்தலை அடுத்து ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பில் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, அமைச்சர் மகிந்த அமரவீர ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவுடனும், ஐதேக தவிசாளர் மலிக் சமரவிக்கிரம மற்றும் பொதுச்செயலர கபீர் காசிம் ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேச்சுக்களில் பங்கெடுத்தனர்.

இந்தச் சந்திப்பின் போது, கூட்டு அரசாங்கத்தைத் தொடர்வதற்கு பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலகி, ஐதேகவைச் சேர்ந்த மற்றொருவரை பிரதமராக நியமிக்குமாறு சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், சிறிலங்கா அதிபரின் இந்தக் கோரிக்கையை ஏற்று பதவி விலக ரணில் விக்கிரமசி்ங்க மறுத்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை இணைந்து கொள்ளும் திட்டம் முன்வைக்கப்பட்ட போதும், ஐதேமு அரசாங்கத்தில் இடம்பெற சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் பலரும் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்படவுள்ளதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றிரவு சந்திப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாததால், இன்றும் பேச்சுக்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, நேற்றிரவு சில ஊடகங்கள், ரணில் விக்கிரமசிங்க பதவி விலகி விட்டதாகவும், கரு ஜெயசூரிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் அதனை பிரதமர் செயலக அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,