பாகிஸ்தானில் மோடி விமானம் தரை இறங்கியதற்கு ரூ.2.86 லட்சம் கட்டணம்

பாகிஸ்தானில் மோடி விமானம் தரை இறங்கியதற்காக பாகிஸ்தான் அரசு ரூ.2.86 லட்சம் கட்டணம் விதித்துள்ளது. இந்த கட்டண செலவுகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்க இருக்கிறது.

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை ரஷியா, ஆப்கானிஸ்தான், ஈரான், கத்தார் ஆகிய நாடுகளுக்கு செல்லும்போது பாகிஸ்தானில் லாகூர் நகரில் தரை இறங்கி விட்டு பின்னர் புறப்பட்டு சென்றார்.

இவ்வாறு அவர் தரை இறங்கிச் சென்றதற்காக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அரசு ரூ.2.86 லட்சம் கட்டணம் விதித்துள்ளது.

2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந்தேதி ரஷியாவில் இருந்து ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியா திரும்பிக் கொண்டு இருந்தபோது லாகூரில் தரை இறங்கி பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார். இதற்காக பாகிஸ்தான் ரூ.1.49 லட்சம் கட்டணம் விதித்து உள்ளது.

இதேபோல் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் ஈரான் சென்றபோது லாகூரில் மோடியின் விமானம் தரை இறங்கியதற்கு ரூ.77,215-ம், அதே ஆண்டு ஜூன் மாதம் கத்தார் சென்றபோது ரூ.59,215-ம் பாகிஸ்தான் கட்டணம் விதித்துள்ளது.

இருமுறை இவ்வாறு தரை இறங்கியதற்காக பாகிஸ்தான் அரசு மொத்தம் ரூ.2.86 லட்சம் கட்டணம் விதித்துள்ளது. இந்த கட்டண செலவுகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்க இருக்கிறது.

டெல்லியைச் சேர்ந்த லோகேஷ் பத்ரா என்ற தன்னார்வலர் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் இந்த தகவல்களை சேகரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!