விசேட நீதிமன்றத்தில் ஜனாதிபதி செயலக முன்னாள் பிரதானிக்கு எதிராக முதல் வழக்கு!

பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி செயலகத்தின் ஆளணியின் பிரதானி காமினி செனரத்துக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

சட்டமா அதிபர் நேற்றையதினம் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்தார். ஹல்கனோ ஹோட்டல் மற்றும் ஸ்பா நிறுவனத்தில் பொது மக்களின் நிதியான 500 மில்லியன் ரூபாவை சட்டவிரோதமான முறையில் முதலீடு செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்திடமிருந்து கன்வில் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு இந்தப் பணம் வழங்கப்பட்டுள்ளது.

காமினி செனரத், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் பியதாச குடாபலகே, முன்னாள் சமுர்த்தி ஆணையாளர் நெய்ல் பண்டார ஹப்புவின மற்றும் லசந்த பண்டார ஆகியோர் பொதுச் சொத்துக்கள் சட்டம், குற்றவியல் சட்டக் கோவை மற்றும் நிதி மோசடிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் இவர்களுக்கு எதிரான விசாரணை பற்றிய அறிக்கை பிரதம நீதியரசர் பிரியசாத் டெப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் முன்நிலையில் தாக்கல் செய்யப்பட்ட பீ அறிக்கையில், அரசாங்கத்தின் பணத்தை மோசடியாக முதலீடு செய்ததாக நால்வருக்கு எதிராகவும் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது. 2012ஆம் ஆண்டு அமைச்சரவையின் அனுமதியுடன் 18.5 பில்லியன் ரூபாவில் 4 பில்லியன் ரூபா சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கன்வில் ஹோல்டிங் நிறுவனமானது பொது நிறுவனம் என்றும், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் 18.5 பில்லியன் ரூபா பங்கினையும், இதன் அதிகமாக பங்குகளை இலங்கை காப்புறுதிக்கூட்டுத்தாபனம் கொண்டிருந்தது என வழக்கு தொடுநர் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் லிட்ரோ காஸ் நிறுவனத்தின் 8.5 பில்லியன் ரூபாய்களும், ஊழியர் சேமாப நிதியத்தின் 5 பில்லியன் ரூபாவும் முதலீடு மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்வில் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தினால் கொள்ளுப்பிட்டியில் அமைக்கப்பட்ட கிரான்ட் ஹயட் ரீகன்சி ஹோட்டலுக்கும் இந்த நிதி முதலீடு செய்யப்பட்டதாகவும், இத்திட்டத்தில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் இணைக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணையின் போது வௌியாகியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 92 ஆவணங்கள் மற்றும் 63 சாட்சியங்களின் பெயர்களையும் சட்டமா அதிபர் பட்டியலிட்டுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய மோசடிகள் தொடர்பில் துரிதமாக விசாரணை நடத்துவதற்காக 3 விசேட மேல் நீதிமன்றங்களை அமைக்க அமைச்சரவை முடிவு செய்திருந்தது.இதன் பிரகாரம் முதலாவது நீதிமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.இது இம்மாத இறுதிக்குள் விசாரணைகளை ஆரம்பிக்கும் என அரசாங்கம் அறிவித்திருந்தது .

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!