ஜப்பானில் ஒரே நாளில் 6 பேருக்கு தூக்கு

டோக்கியோ நகரில் சுரங்கப்பாதையில் 1995ஆம் ஆண்டு நிகழ்ந்த விஷ வாயு தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 6 பேருக்கு நேற்று ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டன.

ஜப்பான் – டோக்கியோ நகரில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில், 1995ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 20ஆம் திகதி ‘சரின்’ என்னும் விஷ வாயு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 ஆயிரத்து 800 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்.

குறித்த தாக்குதலில் அம் ஷின்ரிக்யோ என்ற மத வழிபாட்டுக்குழுவின் தலைவரான ஷோகோ அசஹாரா என்ற சாமியாருக்கும், அவரது குழுவை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இதில் 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. அவர்களுக்கு மரண தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றமான டோக்கியோ மாவட்ட நீதிமன்றம் 2004ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

அந்த தீர்ப்பை ஜப்பான் உயர் நீதி மன்றம் 2006ஆம் ஆண்டு உறுதி செய்தது. ஆனாலும் தண்டிக்கப்பட்டவர்கள் பல்வேறு வகையில் தூக்கில் இருந்து தப்புவதற்கு சட்டப்போராட்டங்கள் நடத்தி, அவை தோல்வியில் முடிந்தன.

அதைத் தொடர்ந்து ஷோகோ அசஹாராவும், அவரது குழுவை சேர்ந்த 6 பேரும் இந்த மாத தொடக்கத்தில் தூக்கில் போடப்பட்டனர்.

இந்த நிலையில் அந்தக் குழுவில் எஞ்சி இருந்த 6 பேரும் நேற்று ஒரே நாளில் தூக்கில் போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!