தமிழில் கரு மூலம் அறிமுகமாகிறார் சாய்பல்லவி!

ஒருவழியாக பிரேமம் சாய்பல்லவி தமிழில் கரு மூலம் அறிமுகமாகிறார். எழுதி இயக்கியிருப்பவர் விஜய். ஒளிப்பதிவு நிரவ்ஷா. இசை சாம் சி.எஸ். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழா கொண்டாட்டத்துக்கு மத்தியில் இயக்குநர் விஜய்யிடம் பேசினோம். என் கேரியரில் முக்கியமான படமாக கருவை நினைக்கிறேன். படத்தின் கதையை லைகா நிறுவனத்திடம் சொன்னேன்.

அப்போதே அவர்களுக்கு பிடித்திருந்தது. இந்தப் படத்தை எப்போது பண்ணினாலும் எங்களுக்குத்தான் பண்ணணும் என்று அன்புக்கட்டளை இட்டார்கள். இந்தப் படத்துக்கு பிரபலமாகவும், அதே சமயம் புதுமுகமாகவும் ஒரு நடிகை தேவைப்பட்டது. அப்போது பிரேமம் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருந்தது. ஆனால், சாய் பல்லவி புதுப் படங்கள் எதையும் கமிட் பண்ணாமல் இருந்தார். சாய் பல்லவி நிறைய படங்களை நிராகரித்துக் கொண்டிருந்த வேளையில் இந்தப் படத்துக்காக அவரை அணுகினேன்.

முதல் சந்திப்பிலேயே மறுத்து விட்டார். பிறகு முழுக் கதையையும் சொல்லி அவரை சம்மதிக்க வைத்தேன். ஏன்னா, இந்தப் படத்தின் பெரிய பலமே சாய் பல்லவிதான். படத்தின் மொத்த சுமையும் அவர் தோள் மீதுதான் இருக்கும். அவரும் தன் பொறுப்புகளை உணர்ந்து மிக அற்புதமான நடிப்பை வழங்கினார். இந்தப் படம் அவருக்கு திருப்தியாக அமைந்ததால் இப்போது சில தமிழ்ப் படங்களை கமிட் பண்ணியுள்ளார்.

நயன்தாராவை வைத்து எப்படி அறம் படம் வெளியானதோ அதேபோல் சாய் பல்லவியை மையமாக வைத்து கதை எழுதும் வகையில் மிகப்பெரிய நடிகையாக வருவார். பேபி சாராவைப் போல் இதில் பேபி வெரோனிகாவை அறிமுகப்படுத்தியுள்ளேன். போஸ்டரில் இருக்கும் குழந்தையும், வெரோனிகாவும் வேறு வேறு குழந்தைகள். நிறைய தேடல்களுக்குப் பிறகு இந்தக் குழந்தையை கண்டுபிடித்தோம். தெய்வத் திருமகள் சாராவுக்குப் பிறகு, இந்தக் குழந்தையையும் நீங்கள் கொண்டாடுவீர்கள்.

என்னுடைய டெக்னீஷியன் டீமில் நிரவ்ஷா சாருக்கு எப்போதும் முதலிடம் இருக்கும். நீரவ் சாருக்கு 2013லேயே இந்தக் கதை தெரியும். அப்போதிலிருந்தே ஒவ்வொரு சீனுக்கும் எப்படி விஷுவல்ஸ் பண்ணப் போகிறார் என்பதை விவரித்தார். எப்போது இந்தக் கதையை படமாக்கப் போகிறோம் என்ற ஆவல் இரண்டு பேருக்குமே இருந்தது. இந்த நேரத்துக்காகத்தான் காத்திருந்தோம்.

எடிட்டர் ஆண்டனி இந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிச்சிருக்கார். என்னுடைய மிகப்பெரிய பலம் மதன் கார்க்கி. நான் பக்கம் பக்கமாக சொல்ல விரும்புவதை இரண்டு நிமிடங்களில் பாடலாகச் சொல்லிவிடுவார். இசையமைப்பாளர் சாம் படத்துக்குப் பொருத்தமான இசையைக் கொடுத்திருக்கிறார் என்றவர் அருகிலிருந்த சாய் பல்லவியிடம் அறிமுகம் செய்துவைத்தார். நான் நடிக்க ஆரம்பித்ததே தற்செயலாக அமைந்ததுதான். தமிழ் ரசிகர்களால் தான், நான் இப்போது தமிழில் அறிமுகமாகிறேன். பிரேமம் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் கொண்டாடி விட்டார்கள். அதனால் என்னையும் மீறி, என் மீது நிறைய பொறுப்புகள் கூடிவிட்டது.

தமிழில் என் முதல் படத்தை நல்ல படமாக பண்ணணும்னு நினைச்சேன். அதனால்தான் இவ்வளவு தாமதமாக என்ட்ரி கொடுத்துள்ளேன். இயக்குநர் விஜய் படங்கள் எனக்குப் பிடிக்கும். அவருடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். படத்தில் நடிக்கும்போது உணர்வுபூர்வமாக படத்தோடு ஒன்றிவிட்டேன். பேபி வெரோனிகாவோடு நடிக்கும்போது எனக்குத்தான் பிரஷர் அதிகம். எனக்கு நடிப்பில் எமோஷன் முதற்கொண்டு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தவர் இயக்குனர் விஜய் என்று தன் இயக்குநரின் புகழ் பாடுகிறார் சாய் பல்லவி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,