ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் பெண்களுக்கு அதிக பாதிப்பு வருமா?

பெண்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாது, ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதால் பெண்களுக்கு அதிக பாதிப்புகள் வரும் என்று சொல்லப்படுகிறது.

ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் பெண்களுக்கு அதிக பாதிப்பு வருமா?
உணவு விஷயத்தில் ஆண் – பெண் என்ற வேறுபாடெல்லாம் தேவையில்லை. ஒருவருக்கு உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இருக்க வேண்டும். அதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கக் கூடாது. அதற்கேற்ப சாப்பிட வேண்டும். உடல் எடையைப் பராமரிக்கக்கூடிய அளவுக்குச் சாப்பிடலாம்.

பெண்களுக்கு 35 – 40 வயதுக்கு மேல் உடலில் எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. அப்போது மட்டும் டயட்டில் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை துரித உணவுகள், இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. சமோசா, பர்கர், பீட்சா, ஃப்ரைடு ரைஸ், சிக்கன் ரைஸ் போன்றவற்றைக் கடையில் வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பொதுவான டயட் என்று ஒன்று கிடையாது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் உடலமைப்பு, பார்க்கும் வேலை ஆகியவற்றின் அடிப்படையில் உணவு முறை இருக்க வேண்டும். 20 வயதில் என்ன சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகிவிடும். 35 – 40 வயதுக்கு மேல் அப்படி ஆகாது. எனவே, அப்போது உணவில் கவனமாக இருக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் ஆண்கள் கடினமான வேலைகளையும், பெண்கள் எளிதான வேலைகளையும் செய்துவந்தார்கள். உடல் உழைப்புக்கு ஏற்றவாறுதான் உணவு உட்கொள்ள வேண்டும் என்பதால், பெண்கள் அளவாகச் சாப்பிட வலியுறுத்தப்பட்டார்கள். அதேசமயம் மாதவிடாய்க் காலங்களில், ஆரோக்கியமான, அதிக அளவு உணவுகளைச் சாப்பிட்டார்கள். ஆனால், தற்காலச் சூழலுக்கு இது பொருந்தாது. பெரும்பாலும் ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான வேலைகளைத்தான் பார்த்துவருகிறார்கள். வயது, உயரம், எடை, செய்யும் வேலை இவற்றின் அடிப்படையில்தான் உணவு உட்கொள்ள வேண்டும்.

எண்ணெயில் பொரித்த உணவுகளை, துரித உணவுகளை, பீட்ஸா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுகளைக் கண்டிப்பாக அனைவருமே தவிர்க்க வேண்டும். இதனால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அவை பெண்களுக்கு எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புள்ளது. வயது, உயரம், எடை ஆகியவை ஒரே அளவுள்ள ஆண் -பெண் இருவரையும் ஒப்பிட்டால், பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு.

பெண்களின் சிறுநீரகம், கல்லீரல் போன்ற பல உள்ளுறுப்புகள் அளவில் சிறியதாகவும், குறைந்த அளவு செயல்பாட்டிலும் இருக்கும். ஹார்மோன், என்சைம் சுரப்பும்கூட ஆண்களைவிட குறைவாகத்தான் இருக்கும். அதனால்தான் `துரித உணவுகளை உட்கொள்ளும்போது பெண்களை பல நோய்கள் எளிதாகத் தாக்குவதற்கு வாய்ப்பு உண்டு’ என்று சொல்லப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,