குறைந்த விலையில் மேக்புக் ஏர் வெளியிடும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலை மேக்புக் ஏர் சாதனத்தை தயாரித்து வருவதாகவும், இந்த சாதனம் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் மேக்புக் ஏர் சாதனத்தை உருவாக்கி வருவதாகவும், இந்த சாதனம் 2018 இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங்-சி கியூ தெரிவித்திருக்கிறார். 2018-ம் ஆண்டு வாக்கில் மேக்புக் மாடல்களின் விநியோகம் 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த விலை மேக்புக் ஏர் வெளியாவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள போதும், புதிய சாதனங்களின் முழு விவரங்கள் வெளியாகவில்லை. எனினும் கடந்த மூன்று ஆண்டுகளில் மேக்புக் ஏர் அப்டேட் செய்யப்படாத நிலையில் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் மேக்புக் ஏர் சாதனத்தின் ஹார்டுவேர் அம்சங்களில் பெருமளவு மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் 13 இன்ச் மேக்புக் மாடலில் பிராசஸர் மட்டும் மாற்றப்பட்டது, எனினும் இதுவும் 2014-15 ஆண்டின் பிராட்வெல் சிப் என்பது குறிப்பிடத்தக்கது. ஹார்டுவேர் மட்டுமின்றி புதிய மாடலின் டிஸ்ப்ளே அதிகளவு மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய மேக்புக் ஏர் மாடலில் 1440×900 பிக்சல் ரெட்டினா டிஸ்ப்ளே, யு.எஸ்.பி. டைப்-சி, தண்டர்போல்ட் 3 அப்கிரேடு மற்றும் முற்றிலும் புதிய வடிவமைப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதிய மேக்புக் ஏப்ரல் – ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே காலக்கட்டத்தில் ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வு நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஏர்பாட்களை இந்த ஆண்டு வெளியிடலாம் என்றும், இதில் வாட்டர் ரெசிஸ்டண்ட், சிரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்பட்டது. இத்துடன் உயர் ரக ஓவர்-இயர் ஹெட்போன் சாதனத்தையும் ஆப்பிள் வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் ஆப்பிள் சார்பில் இதுகுறித்து எவ்வித தகவலும் வழங்கப்படல்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: