பிரான்ஸில் பில் கட்டாததால் தண்ணீர் இணைப்பு இல்லாமல் 12 ஆண்டுகள் வாழ்ந்த குடும்பம்!

பிரான்ஸில் தண்ணீருக்கான பில் கட்டணத்தை கட்டாததால் அந்த குடும்பத்தினருக்கு தண்ணீர் நிறுவனம் 12 ஆண்டுகளாக தண்ணீர தராமல் இருந்துள்ளது. பெர்பிக்னன் நகரை சேர்ந்த பெண் டேனியல். இவருக்கு கடந்த 2005-ஆம் ஆண்டு Saur தண்ணீர் நிறுவனத்திடமிருந்து €300 தண்ணீர் பில் கட்டணம் வந்த நிலையில் அவர் அதை கட்ட தவறியுள்ளார். இதையடுத்து டேனியல் வீட்டில் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இப்படி 12 ஆண்டுகளாக டேனியல் குடும்பத்தார் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் Saur நிறுவனம் டேனியல் வீட்டுக்கு தண்ணீர் தர உத்தரவிடப்பட்டுள்ளது. இதோடு டேனியலுக்காக போராடிய மனித உரிமைகள் குழுவான பிரான்ஸ் லிபர்டீஸ்கு €1,000 வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து டேனியல் கூறுகையில், இத்தனை ஆண்டுகள் எங்கள் வீட்டில் தண்ணீர் வராதது எங்களின் மதிப்பை இழக்க செய்துவிட்டது. பல விடயங்களில், முக்கியமாக கழிப்பறை விடயங்களில் தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டோம்.

பல இடங்களில் தினமும் தண்ணீருக்காக அலைந்தோம் என கூறியுள்ளார். Saur நிறுவனத்தின் இச்செயலுக்கு பிரான்ஸ் லிபர்டீஸ் குழுவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையில் Saur நிறுவனத்தின் வாடிக்கையாளர் மேலாளர் கிறிஸ்டோப் பிட்னோல் கூறுகையில், இனி யாருக்கும் நாங்கள் தண்ணீரை தடை செய்ய மாட்டோம் என கூறியுள்ளார். ஆனாலும் டேனியலுக்கும் Saur நிறுவனத்துக்குமான பிரச்சனை இன்னும் தீரவில்லை, அதாவது தண்ணீர் தடை காலத்தில் டேனியல் சட்டவிரோதமாக தனது வீட்டுக்கு தண்ணீர் இணைப்பு எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தண்ணீரை திருடியதாக அவருக்கு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டேனியல் மேல்முறையீடு செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,