ரணிலைத் துரத்துவது வெறும் கனவு தான்! – ராஜித சேனாரத்ன

எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதே, ரணில் விக்கிரமசிங்கவை துரத்த முடியாதவர்கள், பிரதமர் பதவியில் இருந்து அவரை நீக்குவது வெறும் கனவு மாத்திரமே என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

“அரசாங்கத்திற்குள் எத்தனை பிரச்சினை இருந்தாலும் கண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் போது முழு அரசாங்கமும் இணைந்து ஒரே முடிவையே எடுத்தது. இனவாத, மதவாதத்தை பரப்பும் அமைப்புகளால் இந்த பிரச்சினை ஏற்படுத்தப்பட்டதோடு இதன் பின்னணியில் ஒரு அரசியல் கட்சி செயற்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இந்த வேட்பாளருக்கு தமிழ், முஸ்லிம் வாக்குகள் தேவை. அதிகாரத்திற்கு வரும் நோக்கிலே அவர்கள் அரசவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நாடு முன்னேறுவதை தடுப்பதற்காக நாட்டை தீவைக்க முயல்கிறார்கள். கடந்த கால ஊழல் மோசடிகள் தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்காதது தான் இந்த அரசின் பெரிய பலவீனமாகும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை முன்னெடுக்க ஒன்றிணைந்த எதிரணி தயாராகிறது. ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தலைவருக்கு எதிராக செயற்பட மாட்டார்கள். பிரதமரை அகற்றும் முயற்சியை மேற்கொண்டால் அதனை 6 மாதங்கள் வரை முன்னெடுக்க நேரிடும். ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ​போது அவரை நீக்க முயற்சி செய்தார்கள். ஆனால், முடியவில்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது முடியாதது பிரதமராக இருக்கும் போது சாத்தியமாகாது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,