மொட்டு உறுப்பினராக செயற்படுகிறார் சபாநாயகர்! – எதிர்க்கட்சியினர் கண்டனம்.

அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தற்காலிக தலைவராக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை நியமித்தமைக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் என்ற வகையில் சபாநாயகர் செயற்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
    
பாராளுமன்றம் செவ்வாய்க்கிழமை கூடியபோது, “பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவின் தலைவர் பதவியை ஹர்ஷ டி சில்வாவுக்கு ஏன் வழங்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஆளும்கட்சியின் பிரதம கொறடாவான ,அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அரசாங்க நிதி தொடர்பான தெரிவுக்குழுவுக்கு உறுப்பினர்களை பரிந்துரை செய்யும் அதிகாரம் அரச மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படவில்லை தெரிவு குழு ஊடாகவே தலைவர் தெரிவு செய்யப்படுவார் என்றார்.

தலைவர் பதவியை நாங்கள் எதிர்க்கட்சியின் உறுப்பினர் மயந்த திஸாநாயக்கவுக்கு வழங்கிய போதும் அதனை ஏற்கும் மனநிலை எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என்றும் அதற்கு தாங்கள் பொறுப்புக் கூற முடியாது என்றும் குறிப்பிட்டார்

நிலையான தலைவர் இல்லாமல் தெரிவு குழுவால் எவ்வாறு முறையாக செயற்பட முடியும் என்று கேள்வியெழுப்பிய சுயாதீன எதிர்க்கட்சி எம்.பி. சந்திம வீரக்கொடிபாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறியதுடன், வாசுதேவ நாணயக்கார, மொஹமட் முஸம்மில் ஆகியோரும் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்றனர்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினராக சபாநாயகர் இருக்கலாம் என்றும் எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் என்ற வகையில் சபாநாயகர் செயற்படக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!