“கடந்த அரசாங்கத்தின் திட்டங்களையே தேசிய அரசாங்கம் முழுமைப்படுத்துகின்றது”

மொரஹாகந்த, களுகங்கை அபிவிருத்தி திட்டங்களை காலதாமதமாக்கி விவசாய மக்களை பொருளாதார ரீதியில் பலவீனப்படுத்தியவர்கள் பொறுப்பு செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமையானது கடந்த அரசாங்கத்தினை சாடுவதாக அமைந்துள்ளது என பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

மொரஹாகந்த மற்றும் களுகங்கை அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது கடந்த அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்தமையின் காரணமாக ஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் கடமை எனக்கு காணப்படுகின்றது.

கடந்த 2010 ஆம் ஆண்டு நிதியமைச்சின் சுற்றறிக்கையின் 247 ஆவது பிரிவின் பிரகாரம் சவுதி அரேபியாவிலிருந்து மொரஹாகந்த அபிவிருத்தி திட்டத்திற்காக 46 அமெரிக்க டொலர் கிடைக்கப்பெற்றிருந்தது. இந்நிதியினை அடிப்படையாகக் கொண்டு 2014 ஆம் ஆண்டு மொரஹாகந்த திட்டம் பகுதியளவு முழுமைப் பெற்றிருந்தது.

இதற்கமைய கடந்த அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் கடன்களை பெற்று நிர்மானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனவே கடந்த அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களையே தற்போது தேசிய அரசாங்கம் முழுமைப்படுத்திக் கொண்டு வருகின்றது. ஆகவே இதில் பெருமிதம் கொள்வதற்கு எதுவும் கிடையாது என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!