மக்கள் தேர்தலை விரும்பவில்லை என ஜனாதிபதி கூறும் கருத்து சிரிப்புக்குரியது!

தேர்தலை நடத்தினால் தோற்றுவிடுவேன் என்பதால், தேர்தலை நிறுத்திவிட்டு, மக்கள் தேர்தலை விரும்பவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறும் கருத்து சிரிப்பிற்குரியது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னியின் தலைவர் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.
    
ஜனாதிபதி ரணில் வி்க்கிரமசிங்க தேசியப் பட்டியலூடாக நாடாளுமன்றத்திற்குள் வந்தார். பின் மக்களின் எதிர்ப்பால் கோட்டபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பதவியை இராஜிநாமா செய்ததன் பின்னர் தெரிந்தோ தெரியாமலோ பிரதமராக வந்தார்.

மக்களின் எதிர்ப்பால் கோட்டபாய நாட்டை விட்டு ஓடியதும் சட்ட வழிமுறையின் பிரகாரம் ஜனாதிபதியாக வந்தார். ஆனால் மக்களால் தெரிவுசெய்யப்படாத ஜனாதிபதியாகக் காணப்படும் நிலையில் மக்களும் அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் இவரை ஏற்றுக்கொள்ளாத நிலையில் தான் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர் தேர்தலை நடாத்தி தனது பலத்தை வெளிப்படுத்துவதன் மூலமே மக்கள் மத்தியில் இந்தக் கருத்துக்கள் இல்லாமல் போகும்.

பொருளாதார ரீதியாக நாட்டை ரணில் விக்கிரமசிங்க முன்னேற்றி விட்டார் எனக் கூறப்பட்டாலும் இந்த நாட்டினுடைய 53 பில்லியன் டொலர் கடன்கள் இதுவரை திருப்பச் செலுத்தப்படாது கால அவகாசங்கள் கோரப்பட்டுள்ளது. கால அவகாசத்தை இந்தியா , சீனா உட்பட உலக நாடுகள் பல வழங்கியுள்ளன.

நாட்டின் டொலர் பற்றாக்குறையால் நூற்றுக்கணக்கான பொருட்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. தற்போதும் வாகன இறக்குமதி முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
நாட்டினுள் வரும் சுற்றுலாப் பயணிகளால் நாட்டிற்குள் டொலர் வருகின்றது என்பது யதார்த்தமான உண்மை. ஆயினும் இந்த நாட்டிற்கான இறக்குமதிகளை முழுமையாக திறந்து விடப்படுமிடத்தோ , கடனை மீளச் செலுத்துமிடத்தோ நாடு வங்குரோத்து நிலைக்கு மீண்டும் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளது.

நாட்டில் கடன் வாங்குவதை தவிர வெளிநாட்டு முதலீடுகளின் வருகை அதிகரித்ததாக தெரியவில்லை. புலம்பெயர் தமிழ் மக்களின் உதவிகள், முதலீடுகளை எதிர்பார்க்கின்றாரே தவிர வேறு வழிகளி்ல் முதலீடுகளைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கை எவையும் அவரிடம் காணப்படவி்ல்லை.

இதைவிட இரண்டு நாட்களுக்கு முன் ஜனாதிபதி ஆற்றிய உரையில் இலங்கை மக்கள் தேர்தலில் அக்கறை காட்டவில்லையெனவும் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதிலே அக்கறையாக உள்ளார்கள் என்ற கோணத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

கடந்த ஓரிரு மாதத்திற்கு முன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேலைகளில் விடுப்பெடுத்து பணத்தைச் செலவு செய்து கட்டுப்பணத்தைக் கட்டியிருந்தார்கள். உள்ளூராட்சி சபைகள் ஜனநாயக முறையில் கொண்டு நடாத்தப்பட வேண்டும் என்ற முறையில் தேர்தலில் போட்டியிட தயாராகவிருந்தார்கள்.

தனக்கும் தேர்தல் நிறுத்தத்திற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என ஜனாதிபதி கூறியிருப்பினும் அவர்தான் பொறுப்பு என்ற நிலவரம் காணப்பட்டது. தேர்தலை நடாத்தினால் தான் தோற்றுவிடுவேன் என நம்பி தேர்தலை நிறுத்திவிட்டு, மக்கள் தேர்தலை விரும்பவில்லை எனக் கூறும் கருத்து சிரிப்பிற்குரியது.

அதைவிட அடுத்த வருட முற்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவரும் அவரது கட்சியினரும் பல தடவை கூறி வரும் நிலையில் அந்த தேர்தலுக்கு மக்கள் ஆர்வமாக உள்ளனரா என்ற கேள்வி எழுகின்றது.

மக்கள் யாரும் தேர்தலை நடாத்தக் கூடாது என்ற கோரக்கையை வைத்ததில்லை. எனவே இந்த நாட்டிற்கு உள்ளூராட்சி சபைத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் நடக்கவில்லை. ஆகவே ஜனாதிபதி தானாக முரண்பட்ட செய்திகளை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.

ஜனாதிபதியின் கருத்துக்கள் தவறாகக் காணப்படும் தருணம் மக்கள் தேர்தலை ஏற்றுக்கொள்ளவில்லை என கூறுவதானது, அவர் ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றது.

எனவே இவரின் கருத்து முரண்பட்ட தொனியில் பேசுவதையே காட்டுகின்றது. தனது பதவியை தக்க வைப்பதற்காக எடுக்கும் நடவடிக்கைகளாகவே இவை அனைத்தும் காணப்படுவதாக தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!