பெட்டிகளில் வரும் அமெரிக்க போர் வீரர்கள்

கொரிய யுத்தத்தின் போது காணாமல் போன அமெரிக்க படைவீரர்களின் உடற்பாகங்கள் வடகொரியாவிலிருந்து இன்று ஹவாய் தீவுகளை வந்தடையவுள்ளன.

அமெரிக்க வடகொரிய தலைவர்கள் மத்தியில் இடம்பெற்ற சந்திப்பின் மூலம் ஏற்பட்ட புரிந்துணர்வின் காரணமாக இந்த உடல்களை வடகொரியா அமெரிக்காவிடம் கையளித்துள்ளது.

ஐக்கியநாடுகள் கொடியினால் போர்த்தப்பட்ட 54 பெட்டிகளில் உடற்பாகங்கள் ஹவாய்க்கு வந்துசேரவுள்ளன என தெரிவித்துள்ள நிபுணர்கள் இவற்றை அடையாளம் காண்பதற்கு பல வருடங்களாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்;பிட்ட பெட்டிகளுக்குள் ஒரு நபரின் உடற்பாகங்கள் மாத்திரம் இருக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள நிபுணர் ஒருவர் சிதைந்த எலும்புகளே பெட்டிக்குள் காணப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெட்டிகளுக்குள் காணப்படுபவை மனிதர்களின் உடற்பாகங்களா என்பதை உறுதி செய்வதற்காக பரிசோதனை கூட ஆய்வொன்றை அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளனர்.

அதன் பின்னர் எலும்புகளை எண்ணுவதன் மூலம் எத்தனை பேரின் உடல் பாகங்கள் பெட்டிகளுக்குள் உள்ளன என்ற மதிப்பீடு இடம்பெறும்.

இதன் பின்னர் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ள அதிகாரிகள் இவை பல தசாப்த காலத்திற்கு நீடிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கொரிய யுத்தத்தின் போது 5300 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கெயில் எம்பெரி என்ற பெண் இன்று ஹவாயை வந்தடையவுள்ள பெட்டிகளில் தனது தந்தையின் உடல்பாகங்களும் காணப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரிய யுத்தத்தின் போது காணாமல்போன கொலமன் எட்வேர்ட்ஸ் என்பவரின் மகளான இவருக்கு தற்போது 73 வயது என்பதும் இவர் தனது பத்து வயதில் தனது தந்தையை தொலைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!