நாட்டை இராணுவமயப்படுத்த முனைகிறது கூட்டு அரசாங்கம் – மகிந்த குற்றச்சாட்டு

சிறிலங்கா அரசாங்கம் நாட்டை இராணுவ மயப்படுத்த முனைவதாகவும், இது ஆபத்தான நிலை என்றும் எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

“ நாட்டில் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது. இதனால், நாட்டை இராணுவமயப்படுத்த முயற்சிக்கிறது. இராணுவ மயமாக்கலை சட்டபூர்வமாக்க அரசாங்கம் முனைகிறது.

150 ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பது போல, சிவில் விவகாரங்களில் விசாரணைகளை முன்னெடுக்க காவல்துறையினர் அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்தப் பணி படையினருக்கு முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளது. இது நாட்டை இராணுவமயப்படுத்தும் முயற்சி.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைகள் தொடர்பாக, விசாரணைகளை முன்னெடுக்க படையினர் அனுமதிக்கப்படுவது ஆபத்தானது.

தற்போதைய அரசாங்கம் படைகளைப் பலப்படுத்துவதை விட்டு விட்டு அவர்களுக்கு காவல்துறை அதிகாரங்களைக் கொடுக்கிறது. இதனை அனுமதிக்க முடியாது.

சட்டம் ஒழுங்கை காவல்துறையினர் பேண முடியாவிட்டால், பலவீனம் என்ன என்று விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!