வங்கதேசத்தில் 5 நாட்களாக மாணவர்கள் போராட்டம்- 300 வாகனங்கள் சேதம்

வங்கதேசத்தில் அதிவேகமாக வந்த அரசு பேருந்து மோதியதில் இரண்டு சிறுவர்கள் மரணமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஐந்து நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வங்கதேசத்தில் போக்குவரத்து துறையில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், அபாயகரமான சாலைகளால் தொடர்ந்து விபத்து நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், டாக்காவில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து, சாலையோரம் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவன் மற்றும் சிறுமி மீது மோதியதில் அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆங்காங்கே சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். குறிப்பாக மாணவர்கள் ஆக்ரோஷத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சில பகுதிகளில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசாருடன் மோதலும் நடந்தது. இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியது.

இன்று ஐந்தாவது நாளாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். டாக்காவில் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாணவர்கள் போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. போராட்டம் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அரசு போக்குவரத்து கழகத்தில் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும் என்றும், போராட்டக்காரர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் உள்துறை மந்திரி கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு மட்டும் சாலை விபத்துக்களில் 4200க்கும் மேற்பட்ட பாதசாரிகள் உயிரிழந்ததாகவும், இது முந்தைய ஆண்டைவிட 25 சதவீதம் அதிகம் என்றும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!