மோடியை போல் வேறு எந்த இந்திய பிரதமரும் வெளிநாட்டு இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றியதில்லை – சுஷ்மா

பிரதமர் மோடி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றியதை போன்று வேறு எந்த இந்திய பிரதமரும் உரையாற்றவில்லை என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 4 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

கஜகஸ்தான் செல்லும் வழியில் துர்க்மெனிஸ்தான் சென்ற அவரை அஸ்காபாத் விமான நிலையத்தில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர், ரஷித் மெரிதோவ் வரவேற்றார். விமான நிலையத்தில் நடைபெற்ற சந்திப்பில் இருநாட்டு உறவுகள் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

துர்க்மெனிஸ்தானில் இருந்து கஜகஸ்தான் தலைநகர் அஸ்டானா சென்றடைந்த சுஷ்மாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு, கஜகஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி கைராட் அப்தரக்மனோவை சந்தித்து வர்த்தக உறவுகளை ஊக்கப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

கஜகஸ்தான் வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சுஷ்மா, ’பிரதமர் மோடியை போன்று ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன் சிங் வரையிலான எந்த பிரதமரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்த கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றியது இல்லை. முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் தற்போதய அரசு பிணைப்பை கொண்டுள்ளது’. என தெரிவித்தார்.

இதையடுத்து, கிர்கிஸ்தானில் ஆகஸ்ட் 3, 4ஆம் தேதிகளிலும், பின்னர் உஸ்பெகிஸ்தானில் ஆகஸ்ட் 4, 5ஆம் தேதிகளிலும் சுஷ்மா பயணம் மேற்கொள்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!