டேக் ஆப் ஆகாமல் ரன்வேயை தாண்டி ஓடிய ஜெட் ஏர்வேஸ் விமானம் – அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்

ரியாத் விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானம், ரன்வேயை தாண்டி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சவுதியின் ரியாத் நகரில் இருந்து மும்பைக்கு இன்று அதிகாலை ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. அதில் 142 பயணிகள் 7 ஊழியர்கள் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓடி உயரே எழும்பும் சமயத்தில், திடீரென டேக் ஆப் கைவிடப்பட்டது. இதனால் விமானம் ஓடுபாதையைவிட்டு விலகி அதிவேகமாக ஓடியது.

ஆனால், சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி, சிறிது தூரத்திலேயே விமானத்தை நிறுத்தினார். இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டு, விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டன.

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் கடைசி நேரத்தில் டேக் ஆப் கைவிடப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ஓடுபாதையின் எல்லைக்குள் விமானத்தை நிறுத்துவதற்காக பிரேக்கை கடுமையாக அழுத்தியதால் விமானம் சறுக்கிச் சென்றிருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!