மணிவண்ணனுக்கும் நீதிமன்றம் இடைக்கால தடை

SAMSUNG CAMERA PICTURES
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினரான, வி.மணிவண்ணன், மாநகர சபையின் அமர்வுகளில் பங்கேற்க கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

யாழ். மாநகரசபை எல்லைக்குள் வசிக்காத மணிவண்ணன், மாநகர சபை உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டமை உள்ளூராட்சித் தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளது என்று தொடரப்பட்ட வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சார்பில், நியமிக்கப்பட்ட மணிவண்ணனை யாழ். மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிடுமாறு மனுதாரர் மேன்முறையீட்டு நீதிமன்றிடம் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, 2017ஆம் ஆண்டு வாக்காளர் பதிவில், மணிவண்ணன் யாழ். மாநகரசபை எல்லைக்குள் வசிக்கவில்லை என்று மனுதாரரின் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இருதரப்பு வாதங்களை அடுத்து, இரண்டு நீதியரசர்களை உள்ளடக்கிய அமர்வு, இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் மணிவண்ணன், யாழ். மாநகரசபையின் அமர்வுகளிலோ வாக்கெடுப்பிலோ பங்கேற்க இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.

முன்னதாக, இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருப்பதால், ஈபிடிபியின் யாழ். மாநகர சபை உறுப்பினர் வேலும்மயிலும் குகேந்திரனை (ஜெகன்) பதவி நீக்கம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அவரை யாழ். மாநகரசபை அமர்வுகளில் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!