சாதி பிரச்சனையால் புறக்கணிக்கப்பட்ட மூதாட்டி உடலை சுமந்து சென்ற எம்எல்ஏ

ஒடிசா மாநிலம் அம்னாபாலி கிராமத்தில் சாதி பிரச்சனையால் புறக்கணிக்கப்பட்ட மூதாட்டி உடலை பா.ஜனதா எம்.எல்.ஏ. சுமந்து சென்று இறுதி சடங்கு செய்தார்.

ஒடிசா மாநிலம் அம்னாபாலி கிராமத்தில் 80 வயதான பிச்சைக்கார பெண் வசித்து வந்தார். அவர் திடீரென்று இறந்து விட்டார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கிராமத்தினரிடம் அப்பெண்ணின் உடலை தூக்கி சென்று இறுதி சடங்கு செய்யுமாறு தெரிவித்தனர்.

ஆனால் அப்பெண் எந்த சாதியை சேர்ந்தவர் என்பது தெரியாது என்றும், அவரை தொட்டால் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்றும் கூறி மறுத்து விட்டனர்.

இதுபற்றி போலீசார் ரென்காலி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ரமேஷ் பட்வுலாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் தனது மகன், உறவினர்களுடன் அங்கு வந்தார்.

இறந்த பிச்சைக்கார பெண்ணின் உடலை எம்.எல்.ஏ. மற்றும் உறவினர்கள் தோளில் சுமந்து சென்று இறுதி சடங்கு செய்து சுடுகாட்டில் தகனம் செய்தனர்.

இது குறித்து ரமேஷ் பட்வுலா கூறுகையில், “சாதி தெரியாததால் அப்பெண்ணின் உடலை தொட்டால் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று கிராமத்தினர் பயப்படுகிறார்கள். இறுதி சடங்கு செய்யகூட போதிய நேரம் தரவில்லை” என்றார்.

ரமேஷ் பட்வுலா எம்.எல்.ஏ. இன்றும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார். அவர் ஒடிசா மாநிலத்தில் ஏழை எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!