வக்கிர நிலையை நோக்கி பயணிக்கும் அரசாங்கம் – நாமல்

அரசாங்கம் ஜனநாயக விரோதத்தின் வக்கிர நிலையை நோக்கி பயணிக்கின்றது என குற்றம் சாட்டிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்காவிடின் அதனை அடைவதற்காக போராட்டங்களை நடத்துவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கம் பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு விரோதமாகவே தொடர்ச்சியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. வெறும் 16 உறுப்பினர்களை மாத்திரமே கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்கியுள்ளது. அதேவேளை 7 உறுப்பிகளைக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிர்கட்சி பிரதம கொரடா பதவியை வழங்கியுள்ளது. ஆனால் 70 உறுப்பினர்களைக் கொண்டு பெரும்பான்மை வகிக்கும் பொது எதிரணிக்கு எதிர்கட்சி அந்தஸ்தை வழங்க மறுப்பு தெரிவித்து வருகின்றது.

நாட்டிற்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமாக செயற்படுவதை இந்த அரசாங்கம் நிறுத்த வேண்டும். உரிய காலத்தில் தேர்தலை நடத்த வேண்டும். அதேவேளை பாராளுமன்றத்தில் எதிர்கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இவை மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் செப்டெம்பர் முதலாம் திகதி பொது ஜன பெரமுன ஆதரவாளர்களை இணைத்துக் கொண்டு கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!