வங்காளதேசத்தில் சாலை விபத்தில் உயிர் போனால் தூக்கு தண்டனை

சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு தூக்குதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வர வங்காள தேச அரசு முடிவு செய்துள்ளது.

வங்காளதேசத்தில் அதிக அளவில் சாலை விபத்துகளும் அதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. கடந்த 29-ந் தேதி நடந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர்.

அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் அவர்கள் பலியாகினர். எனவே, சாலை பாதுகாப்பு சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

உயிரிழப்பு ஏற்படுத்துவோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமாக வலியுறுத்தப்பட்டது.

கடந்த 10 நாட்களாக தலைநகர் டாக்காவில் நடந்த போராட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 8 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ரோடு மறியல் போராட்டமும் நடந்தது. டாக்கா உள்பட மற்ற பகுதிகளுக்கும் போராட்டம் பரவியது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை வீசினர். அதில் மாணவர்கள் காயம் அடைந்தனர்.

இருந்தும் போராட்டம் ஓயவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தலைநகர் டாக்கா ஸ்தம்பித்தது.

மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வங்காள தேச அரசு முடிவு செய்தது. அதை தொடர்ந்து மாணவர் பிரதிநிதிகளை அழைத்து அதிகாரிகள் பேச்சு வார்ததை நடத்தினர்.

முடிவில் சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு தூக்குதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!