இத்தாலியில் விமான நிலையம் அருகே டேங்கர் லாரிகள் மோதி தீப்பிடித்தது – 2 பேர் பலி

இத்தாலியின் பொலாக்னா விமான நிலையம் அருகே டேங்கர் லாரிகள் மோதி தீப்பற்றியதில் 2 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர்.

இத்தாலி நாட்டின் போலோக்னா விமான நிலையம் அருகே பாலம் ஒன்றின் மீது கார்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றது. அதே பாதையில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற டேங்கர் லாரியும் சென்றது. இரண்டு லாரிகளும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் லாரிகள் வெடித்து சிதறியுள்ளன. இதனால் ஏற்பட்ட தீயானது வான்வரை பரவியது.

இந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். 60 பேர் காயமடைந்தனர். இந்த மோதலால் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. லாரிகள் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீயானது பாலத்தின் கீழ் இருந்த கார் நிறுத்தும் இடத்திற்கும் பரவியது. இதில் அங்கிருந்த பல்வேறு வாகனங்களும் தீப்பிடித்து வெடித்து சிதறியுள்ளன.

தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களும் மற்றும் ஆம்புலன்சுகளும் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

லாரிகள் மோதி வெடித்து சிதறியபின் கார் நிறுத்தும் இடத்தில் பரவிய தீயில் ஒருவர் சிக்கிக் கொண்டது பற்றிய காட்சியும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!