வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவோர் மக்களின் உரிமைகள் குறித்து சிந்திக்க வேண்டும் – ஜனாதிபதி

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றவர்கள் தங்களது வரப்பிரசாதங்களை பற்றி சிந்திப்பதைப் போன்று நாட்டின் அப்பாவி பொதுமக்களின் உரிமைகளை பற்றியும் மனிதாபிமானத்தோடு சிந்திக்க வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

வேலைநிறுத்தங்களினால் பாதிக்கப்படுவது நாட்டிலுள்ள அப்பாவி மக்களேயன்றி அரசாங்கம் அல்ல என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இன்று முற்பகல் விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவைகள், இலவச சுகாதார சேவைகள் ஆகியவற்றை பயன்படுத்துகின்றவர்கள் நாட்டின் அப்பாவி ஏழை மக்களேயன்றி வசதிபடைத்தவர்கள் அல்ல என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நேற்று இடம்பெற்ற புகையிரத வேலை நிறுத்தத்தின் காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீடுகளுக்கு திரும்பிச் செல்லும் பிள்ளைகள் உட்பட பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் குறித்து கவலை தெரிவித்தார்.

தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்காக எந்தவொருவருக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பம் உள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி கடந்த அரசாங்கத்தை போன்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் துப்பாக்கியை பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டார்.

எனவே நாட்டின் அப்பாவி பொதுமக்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்தாது அறிவு பூர்வமாகவும் மனிதாபிமான அடிப்படையிலும் தங்களது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு புகையிரத மற்றும் வைத்திய துறை உள்ளிட்ட வேலைநிறுத்தங்களுக்கு தயாராகிவரும் தொழிற்சங்கங்களிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

இலங்கை ஆயுர்வேத ஔடதங்கள் கூட்டுத்தாபனமும் இலங்கை இராணுவமும் இணைந்து நடத்திய ஒரு இலட்சம் மூலிகை கன்றுகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்ச்சித் திட்டம் இன்று முற்பகல் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்றது.

“புனருதய – 60 நாள் செயற்திட்டம்” எனப் பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மூலிகை செடி வகைகளை இராணுவ முகாம்களில் முதலில் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

ஆயுர்வேத ஔடதங்கள் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. பேண்தகு அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் ஒரு நடவடிக்கையாக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசத்தின் புத்தெழுச்சிக்காக நாட்டின் அனைத்து துறைகளும் அர்ப்பணிப்பு, தியாகம் மற்றும் நேர்மையுடன் செயற்படவேண்டியது அவசியமாகும் என்று ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்தார்.

நாட்டின் வன அடர்த்தியை அதிகரிப்பதற்கும் போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களிலும் பாரியதொரு புரட்சியை இலங்கை முப்படையினரின் உதவியுடன் முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சிறையில் இருக்கின்றபோதும் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் நாட்டினதும் மக்களினதும் எதிர்காலத்திற்காக உரிய முறையில் நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி முதலாவது மூலிகை கன்றை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவுக்கு வழங்கி வைத்தார். விகாரமகாதேவி பூங்காவில் ஜனாதிபதி சந்தன மரக்கன்றொன்றை நாட்டினார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆயுர்வேத ஔடதங்கள் கூட்டுத் தாபனத்தின் தலைவர் லால் சமரசிங்க, இராணுவ கட்டளைத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத்தின் விவசாயப் பணிப்பாளர் பிரிகேடியர் புவனக்க குணரத்ன உள்ளிட்ட இராணுவ உயரதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!