பிரிட்டன் விசா போரில் வெற்றிபெற்ற 9 வயது இந்திய சிறுவன் செஸ் சாம்பியன்

சிறுவர்களுக்கான செஸ் விளையாட்டுப் போட்டிகளில் உலகில் நான்காம் இடத்தில் உள்ள இந்திய சிறுவன் ஷிரேயாஸ் ராயல்-க்கு விசா நீட்டிப்பு அளிக்க பிரிட்டன் அரசு சம்மதித்துள்ளது.

இந்தியாவின் பெங்களூரு நகரை சேர்ந்தவர் ஜித்தேந்திரா சிங். இந்தியாவின் மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரிட்டன் நாட்டு கென்சிங்டன் நகர் கிளையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்காக கடந்த ஆறாண்டுகளுக்கு முன்னர் ஜித்தேந்திரா சிங் தனது குடும்பத்தாருடன் அந்நாட்டுக்கு சென்றார்.

அவரது மகன் ஷிரேயாஸ் ராயல் செஸ் விளையாட்டை கற்றுதேர்ந்து, உலகளாவிய அளவில் பல சர்வதேச போட்டிகளில் பிரிட்டன் நாட்டின் சார்பில் விளையாடி சிறப்பு சேர்த்து வந்துள்ளான். அடுத்தகட்டமாக பிரிட்டன் நாட்டில் பெரியவர்களுடன் மோதும் தேசிய அளவிலான செஸ் போட்டிகளுக்கு ஷிரேயாஸ் ராயல் தயாராகி வருகிறான்.

இந்நிலையில், அவனது தந்தை பணியாற்றும் நிறுவனத்தின் மூலம் ஷிரேயாஸ் ராயல் குடும்பத்தினர் பிரிட்டனில் தங்கியிருக்க அளிக்கப்பட்ட விசா அடுத்த மாதம் காலாவதியாக உள்ளது. ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பவுண்டுகளுக்கு அதிகமாக சம்பளம் வாங்கினால் மட்டும் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஜித்தேந்திரா சிங்குக்கு விசா நீட்டிப்பு செய்யப்படும் என்பது அந்நாட்டின் குடியுரிமை சட்டமாகும்.

இந்த காரணத்தால் அவரது குடும்பம் பிரிட்டனில் இருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

பிரிட்டனுக்காக பல போட்டிகளில் விளையாடி பெருமை தேடிதந்த ஷிரேயாஸ் ராயலை இந்த நாட்டின் சொத்தாக கருதி அவன் இங்கு தொடர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என ஜித்தேந்திரா சிங் பிரிட்டன் குடியுரிமைத்துறை அலுவலகத்தில் மனு செய்தார்.

அவரது வேண்டுகோளை அந்நாட்டின் தேசிய செஸ் விளையாட்டு சம்மேளனம் மற்றும் சில எம்.பி.க்களும் ஆதரித்தனர்.

குறிப்பாக, பிரிட்டன் நாட்டு பாராளுமன்ற எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் ராச்சேல் ரீவ்ஸ் மற்றும் மேத்யூ பென்னிகுக் ஆகியோர், ‘அவரது தந்தை குறைவாக சம்பாதிக்கிறார் என்னும் ஒரே காரணத்துக்காக அபாரமான திறமை கொண்ட ஷிரேயாஸ் ராயலை இந்த நாடு இழந்து விடகூடாது என வலியுறுத்தி அந்நாட்டின் உள்துறை மந்திரி சாஜித் ஜாவித்துக்கு கடிதம் எழுதி இருந்தனர்.

உலகின் திறமைசாலிகளை ஊக்குவித்து பலர் இங்கு வாழ அனுமதித்துள்ள அரசு ஷிரேயாஸ் மற்றும் அவனது குடும்பத்தினர் இங்கு வாழ அனுமதிக்க வேண்டும் என பல்வேறு எம்.பி.க்களும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், வெளிநாட்டினருக்கான பொது குடியுரிமை (Tier 2) முறைப்படி நீங்கள் விண்ணப்பித்தால் உங்களது விண்ணப்பத்தை சுலபமான முறையில் பரிசீலித்து விசா நீட்டிப்பு செய்ய எங்கள் அலுவலகம் தயாராக உள்ளது என ஜித்தேந்திரா சிங்குக்கு குடியுரிமைத்துறை தகவல் அனுப்பியுள்ளது.

இதனால் ஷிரேயா ராயல் மற்றும் அவனது பெற்றோர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனக்கு துணையாக நின்ற அனைவருக்கும் ஜித்தேந்திரா சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!