சிறிலங்கா அரசில் புத்தரோ, காந்தியோ இல்லை- மனோ கணேசன்

சிறிலங்கா அரசுடன் உடன்பாடுகளைச் செய்து பயனில்லை. ஏனென்னில், உடன்படிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கத்தில் கெளதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லை என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“பலமான தமிழ் கட்சி உருவாவதை ஐக்கிய தேசிய கட்சி விரும்பவில்லை. அவ்வாறு ஒரு பலமான தமிழ் கட்சி உருவானாலும் அந்த கட்சி தமக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்றே நினைப்பார்கள்.

அபிவிருத்தியும் அரசியல் உரிமையும் நம் இரு கண்கள். அதனை எதற்காகவும் விட் டுக்கொடுக்கவியலாது.

தமிழ் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் மாகாண சபையையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேர்வு செய்தார்கள்.ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

இரா.சம்பந்தனும், சீ.வி.விக்னேஸ்வரனும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் முதலில் மனம் விட்டுப் பேசவேண்டும்.

இருவரில் அவர் சரியானவர், இவர் பிழையானவர் என நான் கூறவரவில்லை. இருவருமே மனம் விட்டுப்பேசி தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்பட வேண்டும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உடன்பாடு எதனையாவது செய்துள்ளதா என எனக்கு தெரியாது.

ஆனால் இரு தரப்பிற்கும் இடையில் பேச்சு நடந்த போது அங்கு கூறப்பட்ட விடயங்களை நான் பார்த்தேன். அதில் புதிதாக ஒன்றையும் கூட்டமைப்பு கூறவில்லை. முன்னரே கூறி வந்த விடயங்களை ஞாபகப்படுத்தியிருந்தார்கள்.

நாங்களும் உடன்பாடு எதனையும் செய்யவில்லை. அரசுடனான உடன்பாடுகளில் எமக்கு நம்பிக்கையில்லை. இதுவரை எத்தனை உடன்பாடுகள் செய்யப்பட்டது? அவற்றுக்கு என்ன நடந்தது?

ஆகவே நாம் செய்யும் உடன்பாடுகளை நிறைவேற்ற அரசாங்கத்தில் கெளதம புத்தர்களோ, மகாத்மா காந்திகளோ இல்லை. எல்லாம் அரசியல் பேரம்தான் நடக்கிறது” என்று தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!