காணிகள் விடுவிக்கப்பட்டதை கண்காணிக்கவே இங்கு வந்தேன் – திலக் மாரப்பன

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றதா? இல்லையா? என்பது தொடர்பாக கண்காணிக்கவே நான் இங்கு வருகை தந்தேன் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வவுனியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அங்கு வவுனியா, மன்னார் மாவட்டங்களின் அரச அதிபர்கள், இரு மாவட்டங்களினதும் பிரதேச செயலளார்கள் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக் கலந்துரையாடலில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் அரசாங்கம் வாக்குறுதியளித்திருக்கின்றது. இந் நிலையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றதா இல்லையா என்பதை கண்டறிவதே எனது விஜயத்தின் நோக்கமாகும்.

தம் வசமுள்ள காணிகளில் 90 சதவீதமானவற்றை கையளித்துவிட்டதாக படையினர் கூறுகின்றனர். இந்தக் காணிகள் அரசாங்க அதிபர்களின் பொறுப்பில் கையளிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே, இந்தக் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றதா? என்ன நடந்துள்ளது? போன்ற விடயங்களை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

அத்துடன் இடம்பெயர்ந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளவர்கள் பலர் நாட்டுக்குத் திரும்பியிருக்கின்றார்கள். இவ்வாறு நாடு திரும்பியுள்ளவர்களுக்கான மன்னாரின் நடைபெற்ற தூதரக மட்டத்திலான ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்குரிய நடமாடும் சேவையையும் சென்று பார்வையிட்டேன்.

அதன்போது இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள குடும்பங்களுடைய காணிகளும் படையினர் வசமுள்ளதாகவும் அந்தக் காணிகள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள குடும்பங்களினதும் காணிகளும் படையினரால் மீள் கையளிக்கப்படவில்லை என முறைபாடு கிடைக்கப் பெற்றுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அக் காணிகளை பொது மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கையை முனனெடுப்போம் என்றும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!